உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி முதல் பல்வேறு பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்தை இன்று தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், இரண்டு பெண்மணிகளை குறிப்பிட்டு தனது மகளிர் தின வாழ்த்து செய்தியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "பல ஆண்டுகளாக, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விளையாட்டில் பெண்களின் எழுச்சி மிகவும் ஊக்கமளிக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அது ஒட்டுமொத்த தேசத்திற்கும் உணர்ச்சிகரமான தருணம். அப்போது மைதானத்தில் இருந்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் வந்த நான் முதலில் சென்று நன்றி தெரிவித்தது அங்கு பணிபுரிந்த பெண் பணியாளர் ஒருவருக்கு தான். அந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு 2024 ஜசிந்தா கல்யாண் இந்தியாவின் முதல் பெண் மைதான பராமரிப்பாளர் ஆகியுள்ளார். எதிர்காலத்தில் வரப்போகும் இன்னும் பலர் இவரை போன்று கிரிக்கெட் களத்தில் பணிபுரிவர்.
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், தடைகளைத் தகர்த்தெறிந்து, அனைத்துத் துறைகளிலும் முன்னுதாரணமாக விளங்கும் ஜசிந்தா போன்று முன்மாதிரி பெண்மணிகளை ஊக்குவிப்போம் பாராட்டுவோம்." என்று சச்சின் தெரிவித்திருந்தார்.
மேலும் இருவரின் புகைப்படத்தையும் அந்த வாழ்த்து செய்தியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து சச்சின் பாராட்டிய அந்த ஜசிந்தா கல்யாண் யார் என்று இணையத்தில் பலரும் தேடி வந்தனர்.
இந்தியாவில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பல்வேறு துறைகளில் பெண்களும் இன்று சாதித்து காட்டியுள்ளனர். கிரிக்கெட்டில் கூட இன்று வீராங்கனைகளின் எழுச்சி வியக்கும் வகையில் உள்ளது.
ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் மைதான பராமரிப்பாளராக பொதுவாக ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மைதான பராமரிப்பாளர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை ஜசிந்தா கல்யாண் எட்டியுள்ளார்.

யார் இந்த ஜசிந்தா கல்யாண்?
கர்நாடகாவின் தொடலடஹள்ளியைச் சேர்ந்த ஜெசிந்தா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் (KSCA) பணியாற்றி வந்தார். அங்கு வரவேற்பாளாராக பணியில் சேர்ந்து, பின்னர் நிர்வாக பொறுப்புகளையும் ஏற்றார்.
இந்த நிலையில் தான் அவரை கடந்த 2014ஆம் ஆண்டு கே.எஸ்.சி.ஏ செயலர் பிரிஜேஷ் படேல் சார் மைதானத்தினை அமைத்திடும் பணியில் ஈடுபட வலியுறுத்தினார். புதிய பணியில் சுமார் 6 மாதங்கள் அவர் ஈடுபாட்டுடன் பணியாற்றியதை கண்ட மைதான தலைமை கண்காணிப்பாளர் பிரசாந்த் ராவ் ஆடுகளங்களைத் தயாரிப்பது குறித்து கற்றுக்கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் பிசிசிஐ-யின் மைதான பராமரிப்பாளர் தொடர்பான படிப்பினை முடித்த அவர், கடந்த மாதம் தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நாட்டின் முதல் மைதான பராமரிப்பாளராக பொறுப்பேற்றார்.
ஆண்கள் கோலோச்சிய பதவியில் நாட்டின் முதல் பெண்மணியாக பொறுப்பேற்ற ஒரு விவசாயியின் மகளான ஜெசிந்தாவை தான் சச்சின் இன்று மகளிர் தினத்தில் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!
Thug Life: "வெறித்தன காம்போ" தக் லைஃப் படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

