தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு குழந்தைகளின் ஆதரவு அதிகமாக இருந்தது.தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் அன்று, 'குழந்தைகள் தங்களது பெற்றோரை விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என அன்பாக கூறுங்கள்' என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் விஜய் குழந்தைகளை வைத்து வாக்கு சேகரித்துள்ளார். இது சட்டவிரோதம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், "அனைத்து மாணவ மாணவிகளுக்கும் 17.04.2026 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நலன் பெற்றோர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சில
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், வெப்ப நேரத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள். விடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
குறிப்பாக மே 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் களத்தில் குழந்தைகள் மிகவும் சட்டவிரோதமான தூண்டப்பட்டிருக்கிறார்கள். பதினெட்டு வயதிற்கும் கீழ் முறையில் உள்ள குழந்தைகளை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
தான் விரும்பிய திண்பன்டங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக எல்லா குழந்தைகளும் வீதியில் அழுது புரள்வதில்லை. ஆனால் சில குழந்தைகள் வீதிகளில் அழுது புரள்வதை நாம் கண்கூடாக காண்கிறோம்.
அதேபோல் எல்லா குழந்தைகளும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்ப்பதுமில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்த போவதுமில்லை. சில குழந்தைகள் தாங்கள் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் மட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அமையவில்லையெனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
பெற்றோர்களே அதை போன்றதொரு மனநிலையில் நம் வீட்டு குழந்தைகள் இருந்தால் அவர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகிறது. தேர்தல்/தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் அவர்களை உடன் வைத்திருங்கள். அவர்களுடன் அன்று அதீத நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள். குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-யினை உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமையும் வளர்வதற்கான உரிமையும் பாதுகாப்பிற்கான உரிமையும் பங்கேற்பதற்கான உரிமையும் கிடைக்கசெய்திடலே ஆணையத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாய் இருந்திட பெற்றோர்களே மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளது.

