- ராமச்சந்திர குஹா
தமிழில் : ரவிக்குமார்
2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே, ஒரு இளம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்தேன்.
தனது கட்சியின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அவர் என்னைக் கேட்டார். நான் அவரிடம், ராகுல் காந்தி (Rahul Gandhi) வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தேன் என்றேன். அந்த அறிவுரை புறக்கணிக்கப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்றும் கூறினேன்.



வீணாப் போன ராகுல் காந்தியின் யாத்திரை
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது நம்பகத்தன்மையை உயர்த்தவும், அவரை சாதாரண மக்களுடன் தொடர்புடைய ஒருவராகக் காட்டவும் உதவியது என்பதில் ஐயமில்லை. ஆனால் யாத்திரையால் கிடைத்த பலன்கள், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் குடும்ப அரசியல் காரணமாக வீணாகின. பிரியங்கா காந்தி, அமித் ஷாவுக்காக காந்திநகர் தொகுதி எவ்வளவு பாதுகாப்பானதோ அதேபோல் தனக்காக வயநாடு தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். பின்னர், தானும் தன் சகோதரரும் நாட்டை ஒன்றிணைப்பதாகவும், தாம் தெற்கையும் அவர் வடக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் பெருமிதமாகப் பேசினார். அதன் பின், அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், தனது பாட்டியே அவசரநிலையை விதித்து அரசியலமைப்பை சீர்குலைத்தவர் என்பதையும் பொருட்படுத்தாமல், பிரியங்காவை காங்கிரஸ் கட்சி முதன்மைப் பேச்சாளராக நியமித்தது.

காங்கிரஸின் 99 இடங்கள்
இதற்கிடையில், பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 99 இடங்கள், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் சுற்றியிருந்த புகழ்ச்சிக் கூட்டத்தாரை ஊக்குவித்தன. இது அறிவுஜீவிகளாலும் பத்திரிகையாளர்களாலும் மேலும் பெரிதாக்கப்பட்டன. இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள் என்ற அவர்களின் மரியாதை சரியாக மதிப்பீடு செய்யாமல் அவர்களைத் தடுத்திருக்கலாம். ஒருவேளை ராஜகுரு ஆகலாம் என்ற மயக்கமும் காரணமாக இருக்கலாம் .

ராகுல் காந்தியால் 50% வாக்குகளை இழந்த காங்கிரஸ்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தன்னம்பிக்கை முதிர்ச்சியற்றது என்பதைப் பார்த்தோம்.) காங்கிரஸ் கட்சியின் ஒன்றிரண்டு மாநிலப் பிரிவுகள் (கேரளா போன்றவை) இன்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவையாகவும், அவ்வப்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெறும் திறன்கொண்டவையாகவும் விளங்குகின்றன. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கட்சி தொடர்ந்து ஆதரவை இழந்து வருகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் பல மாநிலங்களில் பாஜக இயல்பான ஆளும் கட்சியாக மாறிவிட்டது; அங்கு காங்கிரஸ் முன்பு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்த வீழ்ச்சியைத் தடுக்க ராகுல் காந்தியால் முடியவில்லை. தி பிரிண்ட் இதழின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2008ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸில் அதிகாரப்பூர்வ பங்கை ஏற்றதிலிருந்து, நாடு முழுவதும் காங்கிரஸின் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து 1,204 இலட்சத்திலிருந்து 676 இலட்சமாகியுள்ளது.
ராகுல் காந்தி பிரதான நம்பிக்கை அல்ல
நான் ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறேன், அவருடன் கடிதப் பரிமாற்றம் செய்தும் இருக்கிறேன்; அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை அறிவேன். இந்தச் சிறிய அறிமுகம் இல்லாவிட்டாலும், அவர் அனுபவித்த தனிப்பட்ட துயரங்களுக்காகவும், ஐம்பத்தைந்து வயதிலும் தாயின் விருப்பத்தின் கருவியாகவே இருப்பதற்காகவும் அவர்மீது எனக்கு இரக்கம் உண்டு. அவர் அரசியலுக்குள் நுழைந்தது சோனியா காந்தியின் கட்டளையினால்தான்; மேலும் அவர் காங்கிரஸைத் தன்னால் இயன்றவரை சிறப்பாக வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தியக் குடியரசின் எதிர்காலம் நெருக்கடியிலிருக்கும்போது ஒருவர் நேரடியாகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும். ராகுல் காந்தி நல்ல மனிதராக இருக்கலாம்; இருந்தாலும், பாஜகவின் வெறுப்பூட்டும் ஆட்சிக்கு எதிராக வெற்றிகரமான மாற்றத்தை விரும்புபவர்கள், அவரைத் தங்கள் பிரதான நம்பிக்கையாகக் காணக் கூடாது.

பிரதமர் வேட்பாளருக்கான தகுதிகள் இல்லாத ராகுல் காந்தி
நரேந்திர மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக, ராகுல் காந்தியிடம் ஒழுக்கம், கம்பீரம், அரசியல் தகுதிகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் ஒருசார்பான நடத்தை போன்ற முக்கிய விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அதை அவர் தொடர்ந்து முன்வைப்பதில்லை. சில சமயங்களில் 'வாக்குத் திருடன்' என்ற குற்றச்சாட்டுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திவிட்டுப், பின்னர் ஐரோப்பாவுக்கோ லத்தீன் அமெரிக்காவுக்கோ பயணம் செல்வதைப் பார்க்கிறோம். உண்மையில், அவரது இருபத்திரண்டு ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், பாரத் ஜோடோ யாத்திரையின் சில மாதங்களில்தான் பாஜக தலைவர்கள் ஆண்டு முழுவதும் காட்டும் கடின உழைப்பை அவர் வெளிப்படுத்தினார். இப்போது அவரது பெரும்பாலான அரசியல் தலையீடுகள் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும், ஒரு நாள் கவனத்தை ஈர்த்து, அடுத்த 24 மணி நேரத்தில் மறக்கப்படும் பதிவுகளாகவே உள்ளன.



அரசியல் ஜிம்மிக்குகள், முதிர்ச்சியின்மை
ராகுலின் கம்பீரமின்மை, அவரது அரசியல் 'ஜிம்மிக்குகளிலும்' வெளிப்படுகிறது. மீனவர்களுடன் சேர்ந்து குளத்தில் குதிப்பது, சமையலறைக்குள் சென்று சமையல் செய்வது போன்ற வீடியோக்கள் அவரது கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என அவர் நம்புவதிலும் முதிர்ச்சியின்மையே வெளிப்படுகிறது. அவரிடம் ஒரு தகுதிப் பட்டியல் இல்லை என்பதற்கான சான்று, அவர் ஒருபோதும் உண்மையான வேலை செய்ததில்லை என்பதே. 2004இல் எம்.பி. ஆகும்முன் அவர் என்ன வேலை செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. யூ.பி.ஏ. ஆட்சியின் பத்து ஆண்டுகளில், அவர் அமைச்சர்பதவியை ஏற்க மறுத்தார். அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரியதும் பல்வகைமையுமுடையதுமான நாட்டின் திறமையான பிரதமராக அவர் இருப்பார் என்று இந்தியர்கள் ஏன் நம்ப வேண்டும்? அதிலும் இன்றைய அச்சுறுத்தலான புவிசார் அரசியல் சூழலில்?
ராகுல் கவனம் செலுத்தாத பகுதிகள்
இறுதியாக, ராகுல் காந்தியிடம் தனது கடந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனும் இல்லை. சௌகிதார் சோர் ஹை ' Chowkidar chor hai' என்ற பிரச்சாரம் 2019இல் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது; இருந்தும் அவர் இன்னும் பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டே இருக்கிறார் (அவரை கோழை, சமரசவாதி என்று அழைக்கிறார்). அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டுதல் , தனது கட்சியை அடித்தளத்திலிருந்து புதுப்பிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

பிரியங்காவுக்கு தகுதி உள்ளதா?
காங்கிரஸில் பலர் இதை ஒப்புக்கொள்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் மீதான விசுவாசத்தின் காரணமாக ராகுலைவிட அவரது சகோதரி பிரியங்கா பிரதமர் வேட்பாளராக முன்வர வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். ராகுல் என்பவர் ஒரு புதிய நேரு அல்ல என உணர்ந்த அவர்கள் , பிரியாங்காவை ஒரு புதிய இந்திராவாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களால் புரிந்துகொள்ளப்படும் இந்தியில் ராகுலைவிடத் திறமையாகப் பேசக்கூடியவர் பிரியங்கா. இருப்பினும், அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி என்ற சுமையைத் தாங்குகிறார். வாக்குகளை ஈர்ப்பதில் அவர் ராகுலைவிடக் குறைவாகவே வெற்றி பெற்றிருக்கிறார். 2022 உத்தரப் பிரதேசத் தேர்தலில் அவர் தலைமையேற்று நடத்திய பிரச்சாரத்தில், காங்கிரஸின் வாக்கு சதவீதம் 2.27% ஆகக் குறைந்துபோனது.



அஸ்ஸாம் முதல் தமிழகம் வரை.. தோற்கும் வாரிசு அரசியல்
சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் இருந்து கிடைக்கும் (ஆனால் கவனிக்கப்படாத) ஒரு பாடம் என்னவெனில், வாரிசு அரசியலைப் பற்றிய எல்லா எதிர்மறை கருத்துகளும் காங்கிரஸோடு மட்டுப்படவில்லை. அசாமில், தருண் கோகோயின் மகனை காங்கிரஸ் முன்னிறுத்தியது பாஜகவுக்கு உதவியது; மேற்கு வங்காளத்தில், மம்தா பானர்ஜி தனது அண்ணன் மகன் அபிஷேக்கை முன்னிறுத்தியது பாஜகவுக்கு ஆதரவானதாக அமைந்தது. தமிழ்நாட்டில், ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்குப் பதவி உயர்வு கொடுத்ததன் மூலம் விஜய்க்கு உதவினார்; கேரளாவில், பினராயி விஜயனின் மருமகனைச் சுற்றிய சர்ச்சைகளால் காங்கிரஸ் பயனடைந்தது . நிச்சயமாக, வேறு பல காரணிகளும் செயல்பட்டன; ஆனால் வாரிசு அரசியலும் அவற்றில் ஒன்று.

பாஜகவின் சீர்குலைவுகள்
காங்கிரஸின் முதல் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், அது தற்போதைய பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகாது. 2014இல் மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து நான் எழுதிய பல கட்டுரைகளில், அது பொது நிறுவனங்களை எவ்வாறு பலவீனப்படுத்தியது, ஊடகங்களையும் நீதித்துறையையும் எவ்வாறு சீர்குலைத்தது, ஜனநாயக நடைமுறைகளை எவ்வாறு பாதித்தது, மதச் சிறுபான்மையினரை எவ்வாறு கொடுமைப்படுத்தியது, இந்திய வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு குலைத்தது, இந்திய அறிவியலை எவ்வாறு சேதப்படுத்தியது, கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்தை எவ்வாறு ஊக்குவித்தது, மேலும் நமது காடுகள், மண், நீர், காற்றை எவ்வாறு அழித்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.


மோடி-ஷாவை வலுப்படுத்தும் சோனியா- ராகுல்
மோடி, அமித் ஷா மற்றும் அவர்களின் கட்சியான பாஜகதான்# இந்தச் சீரழிவின் பிரதான வடிவமைப்பாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு துணைநின்றவர்கள் மோடியும் ஷாவும் மட்டுமல்ல; அவர்களின் ஆட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சியில் உதவியவர்கள் அவர்களின் "பயனுள்ள கூட்டாளிகள்" - சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள ஜால்ரா கூட்டத்தாரும் ஆவர்.
வெல்ல முடியாத நிலையில் பாஜக
எனினும், நான் நம்பிக்கையற்ற குறிப்போடு இதை முடிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு, மோடியின் தலைமையிலான பாஜக வெல்ல முடியாததாகத் தோன்றுகிறது. ஆனால் ஹங்கேரியில் விக்டர் ஓர்பான் மற்றும் ஃபிடெஸ் ( Fidesz )கட்சியும் அப்படித்தான் தோன்றின. இருந்தபோதிலும், அவர்கள் முன்பு பெரிதாக அறியப்படாத பீட்டர் மக்யார் மற்றும் அவரது டிஸ்ஸா கட்சியால் ( Tisza Party) தோற்கடிக்கப்பட்டனர். தேர்தலுக்கு முன் இரண்டு ஆண்டுகள், பீட்டர் மக்யார் நாடு முழுவதும் பயணம் செய்து, சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் மக்களிடம் சென்று, நாட்டை சீரழித்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடினார். இடதுசாரிகள், தாராளவாதிகள், மத்திய- வலதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க அவர் உழைத்தார். ஊழல் அல்லது குடும்ப அரசியலால் களங்கப்படாத புதிய முகமாக இருந்தார்; மேலும் தன் அனைத்து சொத்துகளையும் கடுமையாக உழைத்து உருவாக்கியவர். ஃபைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு ஹங்கேரிய ஆசிரியர் சொன்னது வெளியாகியிருந்தது, "அவர் நம்பமுடியாத அளவுக்கு உந்துதலுடனும் திறமையுடனும் செயல்படுகிறார். மற்றவர்களிடம் கருவிகள் இருந்தன; ஆனால் அவர் நேரில் சென்று எல்லா வேலைகளையும் செய்தார்" . இந்தக் கருத்தை ராகுல் அல்லது பிரியங்கா காந்தியைப் பற்றி யாராலும் கூற முடியாது.

பாஜகவின் அழிவற்ற தன்மை பிம்பம் சிதையும்
தற்போது மோடியின் பாஜக-வைச் சூழ்ந்துள்ள 'அழிவற்ற தன்மை' எனும் பிம்பம், வரும் ஆண்டுகளில் சிதைந்துபோகக்கூடும் என்பது மிகவும் சாத்தியமான ஒன்றே. பொதுக் கல்வித் துறை தற்போது மிகப்பெரும் குழப்ப நிலையில் உள்ளது; 'நீட்' (NEET) தேர்வு தொடர்பான சர்ச்சையே இதற்கு ஒரு தெளிவான அறிகுறியாகும். மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட இழப்புகள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன; ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் சரிந்திருப்பதும், மூலதனம் நாட்டை விட்டு வெளியேறுவதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியிருப்பதும் இதற்குச் சான்றுகளாகும். 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை நெருங்கும் வேளையில், முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வானது-வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கண்ணியமான வேலைவாய்ப்பின்மை அல்லது தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை ஆகிய உண்மையான பிரச்சினைகளுக்கு-ஒருபோதும் ஈடாகாது என்பதைப் பல இந்துக்கள் உணரத் தொடங்குவார்கள்.

Cockroach Janta Party
உண்மையில், அரசியல் நையாண்டிக்கு (political satire) வளர்ந்து வரும் வரவேற்பானது-குறிப்பாக 'Cockroach Janta Party' (CJP) தொடர்பான மீம்ஸ்களுக்குக் கிடைத்த வெற்றியானது-ஆளும் கட்சியின் பொய்களையும் பிரச்சாரங்களையும் இந்திய இளைஞர்கள் பலர் இப்போது ஊடுருவிப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே உணர்த்துகிறது. (பாஜக-விற்கு இந்த உண்மை நன்கு தெரியும்; அதனால்தான் CJP தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் தளங்களை முடக்குவதற்கு அவர்கள் இவ்வளவு தீவிரமாக முயன்று வருகிறார்கள்.) இந்த அதிருப்தி உணர்வு மேலும் ஆழமடையும் பட்சத்தில், யார்
இதை ஒரு வலிமையான அரசியல் சவாலாக வடிவமைக்கப் போகிறார்கள்? ஆளும் கட்சியின் தோல்விகளைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம், நாடு தழுவிய அளவில் வாக்காளர்களைத் தன்பால் ஈர்க்கக்கூடிய தலைவர் அல்லது தலைவர்கள் யார்? அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது ராகுல் காந்தியோ பிரியங்கா காந்தியோ அதைச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
( 30.05.2026 அன்று தி டெலிகிராப் ஆங்கில நாளேட்டில் The Gandhi family and the BJP's dominance Modi's enablers என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை )

