Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மோடியிடம் விஜய் கெஞ்சுவதா? மாநில உரிமையை அடமானம் வைப்பதா? மாஜி சபாநாயகர் அப்பாவு பாய்ச்சல்- ஏன்?

மோடியிடம் விஜய் கெஞ்சுவதா? மாநில உரிமையை அடமானம் வைப்பதா? மாஜி சபாநாயகர் அப்பாவு பாய்ச்சல்- ஏன்?

Minnambalam 2 weeks ago

மிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட அனுமதி கோரி பிரதமர் மோடியிடம் (Modi) தமிழ்நாடு முதல்வர் விஜய் (Vijay) கெஞ்சுவது, மாநில சுயாட்சிக்கு எதிரானது என முன்னாள் சபாநாயகர் அப்பாவு (Appavu) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்பாவு கூறியுள்ளதாவது: மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடபட்டது. தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று மாண்புமிகு பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.

இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம்.
ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.

இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல். இவ்வாறு அப்பாவு கூறியுள்ளார்.

மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை என்ன? (VIJAY)

முன்னதாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம், " மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு" கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam