திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்கினார். இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அரவக்குறிச்சி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் சி.கே. ராஜா, குளித்தலை வேட்பாளர் சூரியனூர் சந்திரன், கரூர் வேட்பாளர் ஆசி.எம். தியாகராஜன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
வெற்றி விழாவிற்கு தயாரா
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,
காலையில் தீரர்கள் கோட்டமான திருச்சியில் பரப்புரையை முடித்துவிட்டு, கரூருக்கு வருகை தந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரூர் என்றால் கழக ஊர். செப்டம்பர் மாதம் நடந்த முப்பெரும் விழா எழுச்சியை மீண்டும் இன்று நான் பார்க்கிறேன். ஏன், அதைவிடப் பன்மடங்கு கூடியிருக்கும் எழுச்சியையும் நான் காண்கிறேன். அடுத்த மாதத்தில் திராவிட மாடல் 2.0 வெற்றி விழாவிற்கு தயாரா?
கரூரை பற்றி கவலையில்லை
கரூரைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை! ஏன் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய இனிய சகோதரர் செந்தில் பாலாஜியின் மாவட்டம் இது. நிச்சயம் நூறு சதவீதம் வெற்றி உறுதி! கரூரில் திமுக கூட்டணியின் வெற்றியை அவர் எப்போதோ உறுதி செய்த காரணத்தினால்தான், கோவை மாவட்டத்தில் நிற்கச் சொல்லி அவருக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். அவர் புகுந்த வீடுதான் கோவை. அவர் பிறந்த கரூரை என்றும் மறக்கமாட்டார். அடுமட்டுமல்ல, பல சோதனைகளைத் தாண்டி, சாதனை படைப்பவர் செந்தில் பாலாஜி. இந்த முறை கரூர், கோவை இரண்டுமே நம் வசம்தான்! ஏன், தமிழ்நாடு மொத்தமும் நாம்தான்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி பெறப்போகிறது! சாதிக்க நான் ரெடி… நீங்கள் ரெடியா?" என கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழியர்களை வஞ்சித்த ஈபிஎஸ்
மேலும் கரூர் மாவட்டத்துக்கு என்னென்ன செய்திருக்கிறோம். என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என பட்டியலிட்ட ஸ்டாலின், " பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வஞ்சனை செய்தார்கள். அவர்கள் சம்பளம் வாங்குவதைக்கூட கிண்டல் செய்து பழனிசாமியே பேசினார். ஆனால், நான் முதலமைச்சரானவுடனே முறையாக கமிட்டி போட்டு, அரசு ஊழியர்கள் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையை, ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியவன்தான் இந்த ஸ்டாலின். அன்றைக்கு அரசு ஊழியர்கள் என்னைக் கோட்டையில் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் யாரும் பார்த்திடாத காட்சி!
இப்படி, ஒருபக்கம் சாதனைகள், இன்னொரு பக்கம் புதிய புதிய மக்கள்நலத் திட்டங்கள், இதுதான் திராவிட மாடல்!
சூப்பர் ஸ்டார் களம்
இந்த திராவிட மாடல் ஆட்சியில், சாதிக் கலவரம் இல்லை! மதக் கலவரம் இல்லை! கும்பல் வன்முறை இல்லை! தொடர் வன்முறைகள் இல்லை! தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது! மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்! இதைப் பார்த்து அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும்தான் டென்ஷனாக இருக்கிறார்கள்! ஏன் என்றால், இந்த அமைதியை கெடுக்க அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகள் அனைத்தும் புஸ்வாணமாக ஆகிவிட்டது! அவர்களின் சதித் திட்டங்கள் அனைத்தும் சந்தி சிரித்துவிட்டது! அவர்களின் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டது! அனைத்திற்கும் காரணம் இந்த தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல; இந்த ஸ்டாலினுக்குப் பக்கபலமாக இருக்கும் நீங்கள்தான் அதற்குக் காரணம்!
தமிழ்நாட்டு மக்களான நீங்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று யாரும் தமிழ்நாட்டைச் சீரழிக்க உள்ளே வர முடியாது! அதைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரத்தான், திராவிட மாடல் 2.0-வுக்கான சூப்பர் ஸ்டார் களத்திற்கு வந்திருக்கிறார். அதுதான், என்.டி.ஏ.வின் தூக்கத்தை கெடுத்து பழனிசாமிக்கு பதட்டத்தை கொடுத்திருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை" என்றார்.
தொடர்ந்து திமுக வாக்குறுதிகளை கூறிய முதல்வர் ஸ்டாலின், " நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி! அந்தச் சாதனைகள்தான் திராவிட மாடல் ஆட்சி!
ஆனால், மக்களுக்கு வேதனைகளும் சோதனைகளும் தந்ததுதான், அ.தி.மு.க. ஆட்சி! அ.தி.மு.க.விற்குப் போட்டி போட்டு கொண்டு தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் இன்றைக்கு இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி! எம்.பி. தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றிபெற வைக்கவில்லையே என்ற விரக்தியில், இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டைப் பழிவாங்கி கொண்டிருப்பதுதான் பா.ஜ.க. ஆட்சி! இப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு விரோதமான கூட்டணிக்கு, தக்கப்பாடம் புகட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 23.
கூட்டணிதான் வைத்தோம் அடகு வைக்கவில்லை
இந்த கரூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வாக்காளர்களும், அடிமை அ.தி.மு.க.விற்கும் ஆணவ பா.ஜ.க.விற்கும் பதிலடி கொடுக்கும் நாள்தான், ஏப்ரல் 23. அன்றைக்கு, பழனிசாமியின் 'அமித்ஷா அ.தி.மு.க'-வை மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் இயக்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து விரட்டியடிக்க முடிவு செய்துவிட்டார்கள்!
தேர்தல் ரிசல்ட்டை இப்போதே தெரிந்துகொண்ட காரணத்தினால்தான் அதிகமாகப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் பழனிசாமி! அதிலும் தன்னைத் தானே பெரிய புலனாய்வுப் புலி என்று நினைத்துக் கொண்டு, இப்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார்!
கலைஞரும் - வாஜ்பாயும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, நீங்கள் கூட்டணி வைக்கவில்லையா என்று கேட்கிறார். நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர; பழனிசாமி மாதிரி அடகு வைக்கவில்லை! அதைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கூட்டணி வைத்தபோது, தி.மு.க., தலைவர் கலைஞரிடம்தான் இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க. அமித்ஷாவிடம்தானே இருக்கிறது? நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசின் கடிவாளத்தைக் கலைஞர் கையில் வைத்திருந்தோம்.
ஆனால், இப்போது, அ.தி.மு.க. மட்டுமல்ல, என்.டி.ஏ.வில் இணைந்திருக்கும் அத்தனை ஊழல் கட்சிகளின் குடுமிப்பிடியும் அமித்ஷாவிடம்தான் இருக்கிறது! நாங்கள் கூட்டணி வைத்தபோது தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், பழனிசாமி கூட்டணி வைத்து, நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்ததுதான் மிச்சம்! இந்த லட்சணத்தில், ஊருக்கே தெரிந்த செய்தியை, அதைப் புகைப்படமாகக் கொண்டுவந்து, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தில் சொல்வது போன்று, மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பெயரளவிற்காவது திராவிட கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை மொத்த அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி, நம்மைப் பார்த்து, இதுதான் நமக்கு கடைசி தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக அமாவாசையை பார்த்து ஆருடம் சொல்லும் பழனிசாமி, இந்த முறையும் தவறான ஆருடத்தையே சொல்லியிருக்கிறார்" என்று விமர்சித்தார்.
மேலும் அவர், " சகோதரர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தொடங்கி, சசிகலா வரைக்கும் துரோகங்களை செய்து, முதுகில் குத்தி கைப்பற்றிய அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு எகத்தாளமாக பேசிக் கொண்டிருக்கிறார். தன்னிலை உணராமல் ஆணவத்தில் ஆடினால் என்ன நிலைமை என்று பழனிசாமி இன்னும் உணரவே இல்லை!

அ.தி.மு.க.வை நான் உடைக்க நினைத்தேன் என்று அபாண்டமாகப் பேசியிருக்கிறார், அ.தி.மு.க.விற்கு வாய்த்த அழிவுசக்தியான பழனிசாமி! தலைமைப் பண்பும், அடக்கமும் இல்லாமல் சொந்தக் கட்சியினரையே துரத்திவிட்டுவிட்டு, சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட துரோகங்கள் செய்த பழனிசாமி, இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்!
அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்கள், இன்றைக்குத் தி.மு.க.விற்கு வருவதைப் பார்த்து வயிறெரிந்து இப்படி பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்ததுதான் அ.தி.மு.க.! திராவிட இயக்க உணர்வில் இருந்து விலகி, அந்த இயக்கத்தைத் தவறான பாதையில் பழனிசாமி கொண்டுபோகும்போது, பலரும் விலகுகிறார்கள்; நம்முடைய தாய்க்கழகத்திற்குத் திரும்புகிறார்கள்! இதில் தவறில்லையே! வழிதவறிச் சென்று, நாட்டிற்கும் - நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதுதான், ஏற்றுக் கொள்ள முடியாதது! இதெல்லாம், பா.ஜ.க.வின் பாதமே சரணாகதி என்று இருக்கும் பழனிசாமிக்கு புரியாது!
ஈபிஎஸ் செய்த துரோகம்
தடம் மாறிக் கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி, செய்த துரோகங்களை சிறிது எண்ணிப் பாருங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது யார்? இந்தியா முழுவதும் அதற்கு எதிராக இஸ்லாமிய பெருமக்கள் போராடியபோது "எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்" என்று எகத்தாளமாகக் கேட்டது யார்? வெயில், மழை, குளிர் இதெல்லாம் பார்க்காமல் தலைநகர் தில்லியில் விவசாயிகள் மாதக்கணக்கில் போராடியபோது மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் அவர்களை எல்லாம் 'புரோக்கர்கள்' என்று கொச்சைப்படுத்தி வாய்கூசாமல் பேசியது யார்? துரோகம் செய்ய வேண்டும். அதையும் டிசைன் டிசைனாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் பழனிசாமி அவர்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய துரோகம் செய்ய அமைத்திருப்பதுதான், டப்பா எஞ்சின் NDA கூட்டணி! துரோகத்திற்குத் துரோகமே துணை என்பது போன்று அமைத்திருப்பதுதான், NDA கூட்டணி!
NDA கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது என்ன என்றால், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை தடுக்க வேண்டும், அழிக்க வேண்டும். இதுதான், NDA கூட்டணியின் நோக்கம்!
NDA-வின் தலைமையாக இருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது! பொதுவாக, பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது; ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில மெகா அறிவிப்புகளை கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தின் முழு உருவம்தான் NDA.
இந்தி திணிப்பு
பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்புத் திட்டத்தையும் செய்ததில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை! மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை! சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை! ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை! குடிநீர் திட்டத்திற்கான நிதியை தரவில்லை!
சரி இதெல்லாம்கூட பரவாயில்லை, எப்படியாவது போராடி, திறமையான நிர்வாகத்தால் நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இருப்பதிலேயே கொடுமை என்னவென்றால்? அவர்கள் செய்யும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக என்ன செய்தார்கள்… நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட கொடுக்காமல் மறுக்கிறார்கள்! இதுவரையில் கொடுக்கவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? சொல்லுங்கள், ஒப்படைக்க முடியுமா? எனவே, NDA-வைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்! அதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது!
NDA கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டிக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, வரிசையாக பல துரோகங்களை செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது NDA! அதனால்தான் சொன்னேன்… இந்த தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி! தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ.!
தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்! தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்" என்று கூறினார்.

