Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ராஜூ முருகனுக்கு குட்பை சொன்ன எஸ்.ஜே.சூர்யா: அடுத்த ஹீரோ இவர்தான்!

ராஜூ முருகனுக்கு குட்பை சொன்ன எஸ்.ஜே.சூர்யா: அடுத்த ஹீரோ இவர்தான்!

Minnambalam 2 years ago

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜூ முருகன்.

குறிப்பாக இவர் இயக்கிய "ஜோக்கர்" படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும், பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

இவர் திரைக்கதை எழுதிய "மெஹந்தி சர்க்கஸ்" திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான "மாடர்ன் லவ் சென்னை" Anthology வெப் சீரிஸில் ராஜூ முருகன் இயக்கிய "லாலகுண்ட பொம்மைகள்" குறும்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. "லாலகுண்ட பொம்மைகள்" படத்தில் இடம்பெற்ற "ஜிங்கர்ததங்கா" என்ற பாடல் இன்றும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

மேலும், இயக்குனர் ராஜூ முருகன் தனது உதவி இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகும் "பராரி" என்ற புதிய படத்தை தயாரித்தும் வருகின்றார்.

கடைசியாக ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "ஜப்பான்" படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்திற்குப் பின்பு ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ராஜூ முருகன் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஒலிம்பியா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்க இருப்பதாகவும், சமூகத்தின் முக்கியமான பிரச்சனையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ராஜூ முருகன் படத்தில் இருந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா விலகி விட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜப்பான் படத்தின் ரிசல்ட் தான் இந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விலகுவதற்கான காரணம் என்றும் அதேநேரத்தில், தெலுங்கில் நானியின் சரிபோதா சனிவாரம், தமிழில் விக்னேஷ் சிவனின் LIC, நடிகர் விக்ரமின் சியான் 62 ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ராஜூ முருகன் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், சரியான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு பதிலாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

அர்ஜுன் தாஸுடன் இணையும் ராஜூ முருகன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- கார்த்திக் ராஜா

லாப்தா லேடீஸ் : விமர்சனம்

"பாஜவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வழக்கு தொடர்வேன்" : சீமான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam