Nine year old girl gang raped and killed in Puducherry
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு, #JusticeForAarthi என்ற ஹேஷ்டேக்கில் பொதுமக்களும், சமூக வலைதள வாசிகளும் கொந்தளித்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு காஷ்மீரில் கத்துவா சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கை கால்கள் உடைக்கப்பட்டு மிக கொடூரமாக காமக் கொடூரர்களால் கொலை செய்யப்பட்டார்.
5 வருடங்கள் கடந்தாலும் இந்த வடுவே பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் மத்தியில் இன்னும் மறையவில்லை. அதேசமயம் நாளுக்கு நாள் பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.
இந்தசூழலில் புதுச்சேரியில் 9 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியின் மையப்பகுதியான சோலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மலர்விழி தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். நாராயணன் டாடா ஏசி ஓட்டுநராக இருக்கிறார். வழக்கமாக இருவரும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். குழந்தைகளுக்கும் பள்ளிக்குச் சென்றுவிடுவார்கள்.
இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி(9), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் 2, 3 சனி ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை. இதனால் மார்ச் 2ஆம் தேதி காலை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார் சிறுமி. பின்னர் குழந்தை வெளியே இல்லாததை கவனித்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.
எங்கேயும் கிடைக்காததால் பதறிப்போன பெற்றோர்கள், அன்று மாலை 6 மணியளவில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடத் தொடங்கினர்.
சிறுமி எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டாரா? யார் கடத்தினார்கள்? என்ற கோணத்தில் விசாரித்தனர். சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரின் பெற்றோர்கள் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக கூறி திங்கள் கிழமை 4 ஆம் தேதி முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம், 'எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். கண்டுபிடித்து தருகிறோம்' என்று உத்தரவாதம் கொடுத்த பிறகு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
சிசிடிவு ஆய்வு
அதன்பிறகு, எஸ்பி லட்சுமி ஐபிஎஸ் தலைமையில் ஒரு குழுவையும், எஸ்டிஎப் (அதிரடிப்படை) எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து அந்த பகுதியில் உள்ள 67 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் அச்சிறுமி சோலைநகர் பகுதியில் இருந்து வெளியில் செல்லவில்லை என்பதை உறுதி செய்து, அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர். மொட்டை மாடி, தோட்டம் என வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தேடினர்.
அந்த பகுதியில் உள்ள கால்வாய், கிணறு, கடற்கரை ஓரம் என அனைத்து பகுதிகளிலும் தேடினர். மறுபக்கம் சிறுமி காணாமல் போன நாள் முதல் சோலைநகரில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என 7 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு சிறிது தொலைவில் உள்ள அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் சாக்கடையில் ஒரு மூட்டை கிடக்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என போலீசாருக்கு நேற்று (மார்ச் 5) தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த மூட்டையை சாக்கடையில் இருந்து எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு வெள்ளை வேட்டியில் சுற்றி, அதற்கு மேல் போர்வையால் சுற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து சிறுமியின் தந்தை நாராயணனை அழைத்து வந்த போலீசார், அது காணாமல் போன 9 வயதுடைய அவரது மகள்தான் என்பதை உறுதி செய்தனர். உடல் ஊறிபோய் அழுகும் நிலையில் இருந்த தங்களது பிள்ளையை பார்த்து உறவினர்களும் பெற்றோர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைதொடர்ந்து, ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற ஏழு பேரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த தலைமறைவாக இருந்த 59 வயதான விவேகானந்தனை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதிரவைக்கும் வாக்குமூலம்…
இதில் விவேகானந்தன், 'எனக்கு மனைவி, பிள்ளைகள் இல்லை. தனிமையில் வசித்து வருகிறேன். அன்றைய தினம் வெளியில் சென்றுவிட்டு 12 மணி வாக்கில் வீட்டுக்கு வரும் போது, இதே தெருவில் வசிக்கும் கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் எனது வீட்டுக்குள் சிறுமியை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். அந்த குழந்தை மயக்க நிலையில் இருந்தது. அதனால் நான் பயந்து வெளியேறிவிட்டேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து போலீசார் கருணாஸிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், "அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்றேன். விவேகானந்தன் வீட்டில் யாரும் இல்லை என்று எனக்கு தெரியும். எனவே அதை பயன்படுத்திக் கொண்டேன். அந்த சமயத்தில் விவேகானந்தனும் வந்துவிட்டார். அங்கு நடந்ததை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து என்னை வெளியே போகச்சொல்லிவிட்டு அவர் உள்ளே இருந்தார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது சிறுமி மயங்கி கிடந்தார். அந்த சிறுமியை வெளியே விட்டுவிட்டால், மயக்கம் தெளிந்ததும் உண்மையை சொல்லிவிடுவார் என இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு, மூட்டையைக் கட்டி கால்வாயில் போட்டுவிட்டோம். என் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக சிறுமியின் அப்பா, அம்மா, ஊர்மக்களுடன் சேர்ந்து நானும் தேடுவது போல் நடித்தேன் என்று கூறினார். இந்த கருணாஸ் கஞ்சா போதைக்கு அடிமையானவர்" என புதுச்சேரி போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

"சிறுமியை கால்வாயில் வீசிய போது அந்த மூட்டை மூழ்கியிருக்கிறது, பின்னர் உடல் அழுகத் தொடங்கிய பின் மேலே மிதந்து வந்திருக்கிறது" என்றும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெடித்த போராட்டம்
20 வயது இளைஞரும், 60 வயது முதியவரும் இப்படி ஒரு வக்கிர செயலில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற தகவலை கேள்விப்பட்ட, புதுச்சேரி மக்கள் பல்வேறு இடங்களிலும் சிறுமியின் புகைப்படம் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதானவரின் வீட்டின் முன் குவிந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் சிவாஜி சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்கரை காந்தி சிலை அருகில் மாணவர்கள், இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சட்டப்பேரவை முன்வந்து, கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். Nine year old girl gang raped and killed in Puducherry
திராவிடர் கழகத்தினர் நேரு சிலை பின்புறம் இருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். அவர்களை பாரதி பூங்கா அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
புதுச்சேரி - தமிழக எல்லையிலும் போராட்டம் நடைபெற்றது. இப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீசார் கலையச் செய்தனர்.

"குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது. சிறையில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ஓய்வு எடுத்துவிட்டு, 3 மாதமோ, 6 மாதமோ கழித்து வெளியே வந்துவிடுவார்கள். அவர்களை எங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி தண்டனை கொடுங்கள். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் நாங்கள் தண்டனை கொடுக்கிறோம். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இதுபோன்ற எண்ணம் கொண்டவர்கள் இனி பெண் பிள்ளைகளை பார்க்கவே அச்சப்பட வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இந்த போரட்டத்தால் புதுச்சேரியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுமியின் பெற்றோர் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தசூழலில் சிறுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச் சடங்கிற்காக வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ள சிறுமியின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சிறுமி ஆர்த்தி விவகாரம் புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ல் 1,49,404 ஆக இருந்த நிலையில் 2022ல் 1,62,449 ஆக அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டது. இந்த 1,62,449 குற்ற வழக்குகளில் 39.7% வழக்குகள் போக்சோ வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-வணங்காமுடி, பிரியா
Shivaratri 2024: சிவராத்திரி, வாரயிறுதி விடுமுறை…136௦ சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
IPL 2024: சென்னை தொடங்கி குஜராத் வரை… பயிற்சியாளர்களின் சம்பளம் இதுதான்!
"நாங்க நலமா இல்லை ஸ்டாலின்" : எடப்பாடி விமர்சனம்!
10 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆவாரா பேராசிரியர் சாய்பாபா? யார் இவர்?

