குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வரும் நிலையில், நாளை (அக்டோபர் 23-ந் தேதி) வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 22-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் நிலவுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதால் நாளை (அக்டோபர் 23-ந் தேதி) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை
இதனால் இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 27 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாளை 3 மாவட்டங்களில்..
நாளை கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்..
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.25-ல் மழை எங்கே?
நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
அக்.26-ல் எத்தனை மாவட்டங்களில்?
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 27, 28
அக்டோபர் 27 மற்றும் 28-ந் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை நிலவரம் என்ன?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கன்னியாகுமரியில் 15 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 14.64 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 13 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினம், நாங்குநேரி, செங்கம், வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். அக்டோபர் 23 முதல் 26-ந் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளிலும் இதேபோன்று பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
அக்டோபர் 25 மற்றும் 26-ந் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு, மத்திய வங்கக்கடலின் பல பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
அதேபோல் அக்டோபர் 22 முதல் 26-ந் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

