Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக அரசியல் மாற்றம்: வெற்றியும் தோல்வியும் எழுப்பும் அடிப்படை கேள்விகள்!

தமிழக அரசியல் மாற்றம்: வெற்றியும் தோல்வியும் எழுப்பும் அடிப்படை கேள்விகள்!

Minnambalam 1 month ago

பேரா. நா. மணி

மிழக அரசியலில் 2026 சட்ட மன்றத் தேர்தல் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் வெறும் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல.

தமிழ் நாட்டு மக்களின் சமூக மனநிலை. அரசியல் பற்றிய அவர்களது நம்பிக்கை. இது ஜனநாயகத்தின் செயல்பாடு குறித்து ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

குறிப்பாக, நடிகர் அடையாளத்திலிருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான புதிய அரசியல் சக்தியின் எழுச்சி, நீண்ட காலமாக நிலைத்திருந்த அரசியல் அமைப்புகளுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிய ஒன்றல்ல. அந்த வரிசையில் விஜயின் அரசியல் முயற்சி பார்க்கப்படலாம். ஆனால், அவரது வெற்றி வெறும் "நடிகர் ஈர்ப்பு" என மட்டும் பார்த்திட முடியாது. அது மக்கள் மனதில் உருவாகியிருந்த மாற்றத்திற்கான ஆவலையும் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கூட்டணியின் தோல்வி பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுவது தான் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும்.

உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்டோரை பிரதிநித்துவம் கட்சிகளின் நிலைப்பாடு தவறா?

முதலில், திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை, அவை தோன்றிய காலம் முதலே மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு பதவி, பணம் போன்றவை இலக்குகள் இல்லை என்பதே அவர்களின் அடிப்படை கோட்பாடு. இன்றைய காலகட்டத்தில் திமுக ஆட்சிக்கு வருவதே சரி என்று திமுக தலைமையை ஆதரித்தது. அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளும் திமுக கூட்டணியை ஆதரித்தன.

இந்தக் கட்சிகளின் நோக்கங்கள் இலக்குகள் முடிவுகள் ஆகியவை தவறு என்று தவெக கட்சியை ஆதரித்தவர்கள் கூறி இருக்கிறார்கள். இடதுசாரி கட்சிகளின் முடிவுகள் தவறா? அல்லது மக்கள் எடுத்த முடிவு தவறா? மக்கள் வாழ்வே தம் இலட்சியம்; அதற்கு மேல் எதுவும் இல்லை என்ற நினைக்கும் இடதுசாரிக் கட்சிகள் முடிவு தவறு என்று தவெகவை ஆதரித்த பொதுமக்கள் சொல்லியது ஏன்? இடதுசாரிகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் கட்சிகளின் நோக்கமும் ஏன் சரியாக சென்றடையவில்லை? இதுவே இந்த தேர்தலின் முக்கியமான அரசியல்-சமூக முரண்பாடாகும்.

குறைந்த பட்ச வாக்குகள் எவ்வளவு தூரம் சரியும்:

கூட்டணி அரசியலின் கணிதம் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டது ஏன்? ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கி இருந்தாலும், அவை அனைத்தும் ஒருங்கிணைந்து "வலுவான கூட்டணி வாக்கு" ஆக மாறவில்லை. இது கூட்டணியின் அடிப்படை அமைப்பில் ஒரு பிழை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஓட்டுக்கு பணத்தின் கதை

"ஓட்டுக்கு பணம்" என்ற பிரச்சினை, இந்தத் தேர்தலிலும் முக்கியமாக பேசப்பட்டது. ஆனால், பணம் வழங்கப்பட்ட அளவு மற்றும் வாக்கு முடிவுகள் இடையே நேரடி தொடர்பு இல்லாதது ஒரு முக்கியமான மாற்றமாகும். இது ஒருபுறம் ஜனநாயகத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதே நேரத்தில், பணம் வாங்குவது தவறில்லை என்ற மனநிலை சமூகத்தில் உருவாகியுள்ளது என்பது கவலைக்குரியது. அரசியல் கட்சிகள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஓட்டுக்குப் பணம் வேலை செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இனிமேலேனும் இந்த ஜனநாயக இழிவு தொலையுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நல்ல செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் தேவையில்லையா?

திமுக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும்போது, பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. காலை உணவுத் திட்டம், விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்கள். எந்த அரசும் நல்ல திட்டங்கள் பலவற்றை அமலாக்கம் செய்யும் போது அதனை அங்கீகரிக்க மறுத்த காரணம் என்ன? அவை மக்கள் நலத் திட்டங்கள் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் என பயனாளர்களும் நினைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

அதே நேரத்தில் "லஞ்சம்" என்ற குற்றச்சாட்டு பெரிதாக பேசப்பட்டது. நல்ல ஆட்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்படுகிறது.

குடும்ப அரசியல் பற்றிய புரிதல் என்ன?:

குடும்ப அரசியல் என்பது ஜனநாயக அரசியலில் உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், திமுக மீதும் காங்கிரஸ் மீதும் அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இது ஓர் உலகளாவிய நிகழ்வு. இடதுசாரி கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது. ஜனநாயக அரசியலில் இது ஒரு கட்டம் என்கிறார்கள் அரசியல் அறிவியல் ஆய்வாளர்கள். அதனை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? குடும்ப அரசியல் என்பதைத் தாண்டி பல ஒப்பீட்டளவில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் அதனை முதன்மைப் படுத்த வேண்டியதில்லை என்ற கருத்துகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

பொதுமக்கள் மனதில் இது ஒரு எதிர்ப்பு உணர்வை உருவாக்கியிருக்கலாமா?

தரமான உரையாடல்

அரசியல் உரையாடலின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். முதல்வரை கடுமையாகவும் தனிப்பட்ட தாக்குதல்களுடன் சுடு சொற்களால் தவெக தலைவர் பிரச்சாரத்தின் போது பேசி வந்தார்.

அது பக்குவப்பட்ட மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் எண்ணினார்கள். ஆனால் அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அது ஒரு "புதிய ஈர்ப்பு" உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது. தவெக தலைவர் விஜய் முதல்வரை எதிர்த்து பேசிய பேச்சுக்களை எடுத்துக் கொள்வதா? அதுவும் கூட விஜய்க்கு வாக்குகளை பெற்றுத் தந்து இருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

மூன்றாவது மாற்று மட்டுமே ஒற்றை குறிக்கோளா?

1967 ஆம் ஆண்டு தொடங்கி திமுக, அதிமுக என்று மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறோம். இரண்டும் மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்துள்ளது. இவை இரண்டிற்கும் ஒரு மாற்று வந்தால்தான் என்ன? என்ற சிந்தனைப் போக்கும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.‌

பாஜக தவெகவை ஏன் கண்டுகொள்ளவில்லை?

திமுகவின் மீது ஆளுநர் அமலாக்கத்துறை வருமான வரித்துறை என ஒன்றிய அரசின் வழியே பாஜக தொடுத்த தொடர் தாக்குதல்கள் தான் எத்தனை?! ஆனால் தவெக மீது ஏன் ஒரேயொரு அடையாளத் தாக்குதலோடு மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. ஏன் மக்கள் இவற்றையெல்லாம் சிந்திக்கவில்லையா? இதன் விளைவுகள் பற்றிய கவலைகள் இல்லையா?

இடைநிலை ஆதிக்க சாதி கோலோச்சுதல் மட்டுப்பட்டதா?

திமுக, அதிமுக இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இடைநிலை நிலை ஆதிக்க சாதியே அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.‌

அந்தக் கட்சிகளில் எவ்வளவு சிறந்த பங்களிப்பை செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கு கட்சிகளில் இணை, துணை பொறுப்புகள் மாவட்டம் முதல் மாநிலம் வரை வழங்கப்பட்டது. சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் என்பது அந்தப் பகுதியில் உள்ள இடைநிலை சாதிகளுக்கே என்று எழுதி வைக்கப்பட்டது.‌ வேறு சாதியினருக்கு சீட் கொடுத்தால் அவர்கள் வெற்றி பெற முடியாது என்ற கற்பிதத்தை உருவாக்கி வைத்திருந்தனர். தவெகவும் அதே நிலைபாட்டில் தானா? ஏதேனும் சில மாற்றங்கள் உண்டா என்பதும் ஆய்வுக்குரியது.

கொள்கை கோட்பாடு வேண்டாமா?

ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் தேவையில்லை. தங்களை கவர்ந்து இழுக்கும் தலைமை இருந்தால் போதும் அதற்கு கீழே உள்ளவர்கள் சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருபவர்களுக்கு எந்தத் தகுதியும் தேவையும் இல்லை. அவர்கள் யார் என்று கூட தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் எந்தவொரு பங்களிப்பும் செய்திருக்க வேண்டியதில்லை. ஆட்சியை அவர்கள் விரும்பிய தலைவரிடம் கொடுத்து விடலாம் என்ற மனநிலையை எப்படி மதிப்பீடு செய்வது?

பெரும் பகுதி சொல்வது ஜனநாயகம் ஆனால் சரியானதா?

இந்த சூழலில், ஜவஹர்லால் நேரு கூறிய ஒரு கருத்து மிகவும் பொருத்தமாகிறது: "மக்கள் சொல்வதே ஜனநாயகம்; ஆனால் அவர்கள் சொல்வது எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை."

இந்தக் கருத்து, தற்போதைய அரசியல் நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அந்த விருப்பத்தின் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்வதே உண்மையான அரசியல் பகுப்பாய்வு.

எச்சரிக்கை மணி யாருக்கு?

இந்தத் தேர்தல் ஒரு எச்சரிக்கை மணி. இது வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, தோல்வியடைந்தவர்களுக்கும் முக்கியமானது. மக்கள்நலன், நிர்வாகத் திறன், ஊழல் எதிர்ப்பு, மற்றும் அரசியல் மொழி ஆகிய அனைத்திலும் புதிய சீர்திருத்தங்கள் தேவை என்பதை இது உணர்த்துகிறது.

தமிழக அரசியல் இனி பழைய பாதையில் செல்லாது. அது ஒரு புதிய திருப்புமுனையில் நின்றிருக்கிறது. இந்த மாற்றத்தை யார் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்களோ, அவர்களே எதிர்காலத்தை நிர்ணயிப்பார்கள்.

கட்டுரையாளர்

நா.மணி,பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam