Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு மக்கள் முட்டாள்களா? - ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மற்றும் விஜய் அரசை விளாசிய அன்புமணி

தமிழ்நாடு மக்கள் முட்டாள்களா? - ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மற்றும் விஜய் அரசை விளாசிய அன்புமணி

Minnambalam 2 months ago

திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நடவடிக்கை, ஒரு ஜனநாயகப் படுகொலை எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

"மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் 2014 முதலே காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினராக இருந்தார். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 2026ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த இரு தேர்தல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு அவரது வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவியது. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட ஆறு பேர் மீது PCR சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த அளவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் இந்த அம்மையாருக்காகக் கடுமையாக உழைத்து வெற்றி பெற வைத்தார்கள். இங்கு மட்டுமல்லாமல் பெருந்துறை, தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. அதையெல்லாம் மீறி, அவர்களை அங்கு வெற்றி பெற வைத்த மக்கள் முட்டாள்களா? அல்லது தமிழ்நாடு மக்கள் முட்டாள்களா? இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடன் இருக்கும் அமைச்சர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், மக்கள் மற்றும் அவர்களுடைய கருத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்களுக்கு இத்தனை கோடி இளைஞர்கள் வாக்களித்தார்கள். அத்தனை பேரும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள். நீங்கள் நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உங்களைத் தேர்வு செய்தார்கள்.

இந்த மூன்று வாரங்களில் ஓரளவுக்கு நல்ல அதிகாரிகளை நியமனம் செய்திருக்கிறீர்கள். டாஸ்மாக் கடைகளை மூடும் செயலை நாங்கள் வரவேற்கிறோம். ஐந்து ஏக்கருக்கும் குறைவான விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள்; அதில் முதல்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். நேற்று 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள். இதையெல்லாம் நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், அதற்கு நேர்மாறாக இது போன்ற மோசடிச் செயல்களில் ஈடுபடுகிறீர்கள். தேர்தல் களத்தில் எவ்வளவு சிரமப்பட்டு இவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் (எங்கள் கூட்டணி) உருவாக்கினோம். அவர்களை வேண்டுமென்றே ராஜினாமா செய்ய வைத்து, அடுத்த பத்து நிமிடத்திற்குள் உங்கள் கட்சியில் இணைத்துக்கொள்கிறீர்கள்.

ஆனால், தேர்தலில் நிற்க வையுங்கள், பார்க்கலாம். மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதிக்குள் இனி போக முடியாது; மக்கள் அங்கு கடுமையாக எதிர்க்கிறார்கள். அதேபோல் தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இடங்களிலும் நிலைமை இதுதான். ஆகவே, இதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam