அதிமுக என்பது எங்களின் உயிர் மூச்சு. நாங்கள் பதவிக்காகச் செயல்படுபவர்கள் அல்ல; கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, தற்போது அனைவரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.
வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, இன்று (மே 28) முதன்முறையாக கோவை வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச்செயலாளர் "நாங்கள் பதவிக்காகக் கட்சி மாறுகிறோம் என்று சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. தேர்தலுக்கு முன்புகூட யாரும் இதுபோன்று வேலை செய்யவில்லை. எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நானும், சி.வி. சண்முகமும் அவரிடம் சில கோரிக்கைகளை வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை ஏற்று, 'ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்' என்று அவரும் உறுதியளித்துள்ளார். கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்களின் ஒரே நோக்கம்.
நானும் அண்ணன் சி.வி. சண்முகமும் இன்று காலை கூடப் பேசினோம். நாங்கள் அண்ணன், தம்பிகளைப் போல ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்பவே நாங்கள் செயல்படுவோம். கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அவை அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு, பொதுச்செயலாளரை நேரில் சந்தித்துவிட்டோம். சி.வி. சண்முகத்தின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."
தவெக-விற்கு ஆதரவு ஏன்?
"சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்தது குறித்து ஊடகங்கள் பல்வேறு யூகங்களை எழுப்புகின்றன. மக்கள் தவெக-வை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையிலும், திமுக எதிர்ப்பு என்ற கொள்கை ரீதியாகவும் தான் நாங்கள் சட்டமன்றத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம். தவெக தரப்பிலும் எங்களிடம் யாரும் பதவி கேட்டு வரவில்லை, அவர்களும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால், யூடியூப் மற்றும் சில ஊடகங்கள் தங்களுக்குத் தோன்றிய எண்ணங்களை மக்கள் மத்தியில் திணிக்க முயல்கின்றன.
அதிமுக பொன்விழா கண்ட கட்சி; 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த பேரியக்கம். கடந்த தேர்தலில் நாம் தற்காலிகமாகத் தோற்றிருக்கலாம். ஆனால், மீண்டும் அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது, கழகம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சில விவாதங்கள் எழுந்தன. நேற்று இரவு வரை நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம்" என்றார்.
அப்போது, "தமிழக வெற்றிக் கழக ஆதரவு நிலைப்பாட்டில் தற்போது இருக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, "தேவையான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்" என்றார்.
முடங்கிய திட்டங்கள்
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் புதிய அரசு இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் நிறைய தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளனர். மக்கள் நலனுக்காக அவற்றை அவர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம். புதிய அரசு என்பதால், அவர்கள் செயல்பட நாம் சற்றே வாய்ப்பளிக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. தமிழகத்திற்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் குறித்த புத்தகத்தை முதலமைச்சரிடம் நேரில் வழங்கியுள்ளோம்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் எங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கிக் கிடக்கின்றன. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பணியாற்ற வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், மக்களுக்காகச் சட்டமன்றத்தில் எங்கள் குரல் வலிமையாக ஒலிக்கும். தற்போது தமிழகத்தில் குற்றங்களும், போதைப்பொருள் கலாச்சாரமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்த கேள்விக்கு, "ஊடகங்களின் யூகக் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். நாங்கள் எத்தனையோ தோல்விகளைப் பார்த்திருக்கிறோம். தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவண்டு போக மாட்டோம்; இந்தத் தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி, வரும் தேர்தல் களத்தில் எங்களின் பலத்தை நிரூபிப்போம்" என்று எஸ்.பி. வேலுமணி கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் நிறைவாக, 'உங்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்குமா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் எஸ்.பி. வேலுமணி அங்கிருந்து கிளம்பினார்.

