Dailyhunt
தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன் .. மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்

தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன் .. மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்

Minnambalam 2 weeks ago

காங்கிரஸ் கட்சிக்கு என்னால் எந்த ஒரு சிரமமும் வரக்கூடாது என நினைப்பவன் நான் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி இன்று (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக் குழு நேற்று டெல்லியில் கூடியது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மாணிக்கம் தாகூர் தேர்தல் பணியிலிருந்து விலகியது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:"நேற்று முதல் தேவையில்லாத ஒரு குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு என்னால் எந்த ஒரு சிரமமும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான்.

தேர்தல் சம்பந்தப்பட்ட மாநில அளவிலான சில பொறுப்புகள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தன. அந்தப் பொறுப்பில் நான் தொடர விரும்பவில்லை என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். இது கடந்த 28ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதைப் பற்றிய விவாதங்கள் தேவையில்லாதவை.

என்னைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் எனது பணியைத் தொடர்வேன். பாராளுமன்றக் கொறடாவின் பணி முடிந்தவுடன், திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஆறு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான என்னுடைய உழைப்பு தொடரும்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியின் தோழர்களோடு இணைந்து பணியாற்றி, ஆறில் ஆறு தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்வதற்காக நானும் வந்து சேர்வேன்."இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த மாணிக்கம் தாகூர் எம்பி திமுக கூட்டணியில் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளில் தேர்தல் பணியில் இருந்து விலகுவதாக கார்கேவிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam