Dailyhunt
தேர்தல் ருசிகரம் : சாதி, மத எல்லைகளை கடந்த தேர்தல் பிரச்சாரங்கள்!

தேர்தல் ருசிகரம் : சாதி, மத எல்லைகளை கடந்த தேர்தல் பிரச்சாரங்கள்!

Minnambalam 3 weeks ago

மிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காலையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கிறார்.

அதுபோன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுப்பதும், ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் பதிலடி கொடுப்பதும் தேர்தல் களமே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

அதேசமயம் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து பேசுவது, பஜ்ஜி சுடுவது, டீ போடுவது என சுவாரஸ்யமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில் பிரச்சாரக் களங்கள் மதம், நம்பிக்கை மற்றும் சாதி எல்லைகளைக் கடந்து செல்கின்றன.

"நான் கடவுள் வழிபாடு செய்வதில்லை" என பல நேர்காணல்களில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின், அன்றைய தினம் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னர் அங்கே இருக்கும் செங்கேணி அம்மன் கோயிலில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதாவது எம்.பி.தயாநிதி மாறன், அண்ணாநகர் வேட்பாளர் சிற்றரசு ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்த நிலையில் அதில் உதயநிதியும் கலந்துகொண்டார்.

பாலக்கோட்டில், தர்மபுரி எம்பி-யாக இருந்தபோது சாலைத் திட்டத்திற்கான பூமி பூஜை மற்றும் மத சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில் குமார், தனது பிரச்சாரத்தின் போது கோவிலுக்கு சென்றுள்ளார்.

பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட கெரகோடஹள்ளியில் செலகாரப்பன், செலகாரம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்துள்ளது. இதில், திமுக மாநில வர்த்தக அணி செயலர் தர்மசெல்வன், வேட்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் வழிபாடு செய்தனர்.

அதுபோன்று தமிழக வெற்றிக் கழக சிவகாசி தொகுதி வேட்பாளரான இந்து மதத்தைச் சேர்ந்த கீர்த்தனா மசூதிக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் களத்தில் மற்றொரு ருசிகரமாக கும்மிடிப்பூண்டியில், அதிமுக வேட்பாளர் வி. சுதாகர், தனது எதிரணியைச் சேர்ந்த திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தன்னைவிட மூத்தவர் என்று கூறி அவரிடம் ஆசி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மஜக வேட்பாளராக போட்டியிடும் தமிமுன் அன்சாரி நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற போது நடராஜர் கோயில் அர்ச்சகர் ஒருவரை சந்தித்து உரையாடினார். அப்போது மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என தமிமுன் அன்சாரியை அர்ச்சகர் வாழ்த்தியுள்ளார்.

இப்படியாக தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது வெறும் அரசியல் மோதல்களாக மட்டும் இல்லாமல், மதம், சாதி மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்த ஒரு சுவாரஸ்யமான களமாக மாறியிருக்கிறது.

இந்த 'எல்லை கடந்த' பிரச்சாரங்கள் மக்களின் வாக்குகளாக மாறுமா அல்லது வெறும் தேர்தல் காலக் காட்சிகளாகவே நின்றுவிடுமா என மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam