Dailyhunt
உச்சபட்ச தண்டனையா? குறைந்தபட்ச தண்டனையா? சாத்தான்குளம் வழக்கில் ஏப்ரல் 6ல் இறுதி தீர்ப்பு!

உச்சபட்ச தண்டனையா? குறைந்தபட்ச தண்டனையா? சாத்தான்குளம் வழக்கில் ஏப்ரல் 6ல் இறுதி தீர்ப்பு!

Minnambalam 1 week ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேருக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு பொது முடக்கத்தின் போது, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பு விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்த நிலையில், சிபிஐ சார்பில் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனால் ஏப்ரல் 2ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் 'ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளதால் குற்றவாளிகளுக்கு உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும்'என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் இருக்காது. ஆனால் இவ்வழக்கில் மூன்று பேர் நேரடி சாட்சிகளாக உள்ளனர் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் காவல் அதிகாரிகள் சார்பில், ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். எனவே எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர், நான் கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்களை அடிக்கவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இரண்டாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாலகிருஷ்ணனிடம், 'நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், கடைசியாக எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள்' என்று நீதிபதி கேள்வி எழுப்ப,

இதற்கு பாலகிருஷ்ணன், 'எனக்கு வேறு வருமானம் இல்லை.. எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்று நீதிபதியிடம் குறிப்பிட்டார்.

மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சார்பு ஆய்வாளர் ரகு கணேசிடம் அவரது குடும்ப விவரங்கள் பற்றி நீதிபதி கேட்டார். அப்போது ரகு கணேஷ் எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான முருகன் நீதிபதியிடம், நான் பத்தாவது வரை படித்துள்ளேன். எனக்கு கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. எனது பணியை சிறப்பாக செய்து வந்தேன். இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவலர் சாமதுரை முத்துராஜா மற்றும் செல்லதுரை ஆகியோர் சார்பிலும் குடும்ப சூழ்நிலையை நீதிபதியிடம் தெரிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மற்றொரு காவலர் தாமஸ் பிரான்சிஸ் சார்பில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

காவலர் வெயிலு முத்து சார்பில், தனக்கு மனநலம் குன்றிய ஒரு தங்கை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காவலர்களைத் தொடர்ந்து ஜெயராஜ் பென்னிக்ஸ் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

குற்றம் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை போன்று உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் ஏப்ரல் 6ம் தேதி தண்டனை விவரத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam