Dailyhunt
உழைப்புக்கு பலனை வருகிற 4-ந் தேதி பெறவிருக்கிறோம் - மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

உழைப்புக்கு பலனை வருகிற 4-ந் தேதி பெறவிருக்கிறோம் - மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Minnambalam 1 week ago

லகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் தின நினைவுத் தூணில், செந்நிற உடையில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் இந்தியாவிலேயே சென்னையில் தான் இந்த மே நாள் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. சிங்காரவேலர் தலைமையில் தான் முதன் முதலில் சென்னையில் மே நாள் கொண்டாடப்பட்டது.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது தொழிலாளர்களின் உரிமை. அதேபோல், இன்றைக்கு நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலனை வருகிற மே 4ஆம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை. கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை. களத்தை பார்த்ததால் கூறுகிறேன். கழகத்தின் உணர்வை உணர்ந்து கொண்டிருக்கும் காரணத்தால் அந்த கருத்தை எடுத்து வைத்திருக்கிறேன்.

தொழிலாளருக்கான மரியாதையை, மதிப்பை, உரிமையைப் போற்றும் வகையில் இந்த நாளைக் கொண்டாடி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவித்தார். விடுமுறை மட்டுமின்றி, ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கான சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இயற்றினார்.

தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் இருந்த இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அதனை ஏற்று, இந்தியா முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அமல்படுத்தினார். இந்த மே தினப் பூங்காவை கலைஞர் அவர்கள் தான் அமைத்துக் கொடுத்தார்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உரிமைகள் மீது கலைஞர் அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம்" என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam