வேலூர் திமுக மாநகர பொருளாளர் அசோகனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 19) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் அருகே தோட்டப்பாளையம் பகுதியில் திமுக வேலூர் மாநகர பொருளாளர் அசோகன் அலுவலகம் உள்ளது. அங்கு 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரவு 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக நாம் திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஒருகாலத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அசோகன், பின்னர் விலகி மீண்டும் அவரது ஆதரவாளரானார். வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராகவும் இருக்கிறார்.
கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைப்பதில் இவர் மீது சில பணப்புகார்கள் இருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்" என்கிறார்கள்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூரில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

