Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விடியல் பயணம்: அபலைப் பெண்களின் நம்பிக்கை!

விடியல் பயணம்: அபலைப் பெண்களின் நம்பிக்கை!

Minnambalam 1 month ago

நா.மணி

31/03/26 மாலை. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சத்தி செல்லும் பேருந்தில் ஏறினேன்.

எனது பயணம் என்னவோ அடுத்த பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே.

சித்தோட்டில் இறங்க வேண்டும். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு "என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?" என்பது குறித்து ஒரு கலந்தாலோசனை.

பேருந்து நகரும் போது தான் ஏற நேர்ந்தது. எனக்கு பின்னர் ஒரு பெண் ஏறினார். கடுமையாக உழைத்து வாழ்பவர் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு எதிரே இருக்கையில் அமர்ந்தார்.

கண்ணீர் விட்டு அழுது ஓய்ந்து இருக்கிறாரா? மிகவும் களைத்துப் போனதால் இப்படி இருக்கிறாரா? கடும் பசியா? உடல் நலக் குறைவா? கணவர் மிக மோசமாக அடித்து துரத்தி விட்டாரா? எனப் பலவாறு சிந்திக்கத் தோன்றியது. உடனடியாக எதையும் மதிப்பீடு செய்ய முடியவில்லை.

அவரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர் முகத்தை பார்க்கவும் சங்கடமாக இருந்தது.

நடத்துனர் வருவதற்குள் பயணச்சீட்டுத் தொகையை கையில் எடுத்தார். மூன்று பத்து ரூபாய் தாள்கள் அவை. ஒவ்வொன்றாக அவற்றை எடுத்தார். மிகவும் பழைய பத்து ரூபாய் நோட்டுகள். பல மடிப்புகள் கொண்டவை. ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அவற்றை நேராக அவரால் நிமிர்த்த முடியவில்லை. மடிப்புகளின் தன்மைக்கு ஏற்ப அவை நீட்டிக்கொண்டு இருந்தது. அவற்றை உற்றுப் பார்த்தார். இந்த நோட்டுகள் செல்லுமா என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

லேசாக என்னை திரும்பிப் பார்த்தார். நான் அந்த நோட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"சார்! இந்த நோட்டுகள் செல்லாதுன்னு சொல்லிட்டா என்ன செய்யறது? இந்த நோட்டை வச்சுக்கிட்டு வேற நோட்டு தரீங்களா? என்னிடம் வேறு பணம் இல்லை" என்றார்.

"கண்டக்டரிடம் கொடுங்கள். வேண்டாம் என்று கூறிவிட்டால் தருகிறேன்" என்றேன். சிறிது நேரத்தில், அப்படி சொல்லிருக்கக் கூடாது என்று தோன்றியது. "சரி, கொடுங்க, தருகிறேன்" என்றேன்.

"இல்லைங்க. நீங்க சொல்றது தான் சரி, கண்டக்டர் வரட்டும்" என்றார்.

கண்டக்டர் வந்தவுடன், "சத்தியமங்கலத்திற்கு ஒரு டிக்கெட் குடுங்க" என்றார்.

"37 ரூபாய்" என்றார் கண்டக்டர்.

மூன்று பத்து ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை கொடுத்தார். அந்தப் பணத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவரையும் பார்த்தார்.

"இன்னும் இரண்டு ரூபாய்?" என்றார்.‌ "சார், என்கிட்ட அவ்வளவு தான் இருக்கு. பாயிண்ட் டு பாயிண்ட் எனத் தெரியாம ஏறிட்டேன். பார்த்து ஒரு டிக்கெட் கொடுங்க" என்றார்.

பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட அவர், திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

"நாங்க கட்டட வேலை செய்றவங்க. இன்னைக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் போது மேலிருந்து ஒரு கல்லு மூக்கு மேல தவறி விழுந்துருச்சு. மேஸ்திரி ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்தார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தோம். எலும்பு முறிவு இல்லைன்னு சொல்லிட்டாங்க. நாலு நாள் ரெஸ்ட் எடுத்தா போதும்னு சொன்னார் டாக்டர். நாங்க தினசரி வேலைக்கு போறவங்க. இங்க என்ன பண்றது? அதான் சொந்த ஊருக்கு போறேன்" என்றார். அப்போதுதான் கவனித்தேன். மூக்கு நன்றாக வீங்கி இருந்தது. வலது கண் நன்கு சிவந்திருந்தது.

"மேஸ்திரி ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்திட்டார். அவர்கிட்ட பஸ்க்கு எப்படி பணம் வாங்குவது? மேஸ்திரி பஸ்சுக்கு காசு இருக்குதான்னு கேட்டார். நான்தான் இருக்குதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் பார்த்தா இந்த மூன்று பத்து ரூபா நோட்டு தான் இருந்தது" என்றார்.

"நோட்டு செல்லாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டேன்.

"எங்களப் போலவங்களுக்கு அந்த மகராசன் (மு.க. ஸ்டாலின்) விட்ட பஸ் இருக்கே. ஈரோட்டிலிருந்து கவுந்தப்பாடி, அங்கிருந்து கோபி, அப்படியே சக்தி - டவுன் பஸ் டவுன் பஸா ஏறிப் போயிருப்பேன். கொஞ்சம் லேட் ஆகும். அவ்வளவுதான்" என்றார்.

ஐம்பது ரூபாய் தாளை கொடுத்து, "வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். "வேண்டாங்க" என்று மறுத்துவிட்டார். "ஏற்பது இகழ்ச்சி" என்பதை எவ்வளவு ஆழமாகப் புரிந்திருக்கிறார்! எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அதைப் பின்பற்றுகிறார்! என்று நினைத்து வியந்தேன். "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தது" என்பதும் நினைவுக்கு வந்தது.

பேருந்து கட்டணத்திற்கு இரண்டு ரூபாய் போதவில்லை. இப்போது கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. ஆனாலும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். "அரசு பேருந்து இருக்கிறது; அந்த மகராசன் இருக்கிறான்" என்ற நம்பிக்கை, தமிழ்நாட்டில் வாழும் இத்தகைய அபலைப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய பலம்!

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், என் மனதில் ஓடிக்கொண்டிருப்பது, உரையாடும்போது, சில நேரங்களில் கூட்டங்களில், கருத்தரங்குகளில், இது பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும் போது, இது பற்றி பேசி இருக்கிறேன். "கையில் ஒரு காசு இல்லாத, ஒரு அபலைப் பெண், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகவே வேண்டாம். போக முடியும் என்ற நம்பிக்கை. அதை மனதில் நினைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம், மகிழ்ச்சி - அதுவே விலை மதிக்க முடியாதது" என்று கூறி இருக்கிறேன்.

இதுவே இத்திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என எத்தனையோ முறை பேசி இருக்கிறேன். பேருந்துகளில் விடியல் பயணம் பெண்கள் மேற்கொள்வதை கண்டிருந்தாலும், இத்தகைய அபலைப் பெண்களின் நம்பிக்கையாக விடியல் பேருந்துகள் விளங்குவதை கண்ணாறக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

கட்டுரையாளர்:

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam