10ஆம் மாணவிக்கு பாலியல் தொல்லை புகார் அளித்ததாகக் கூறி தவெக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21). இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். விஜயின் தீவிர ரசிகராகவும் ஆதரவாளராகவும் இருந்து வந்த இவர், தற்போது தவெக கட்சியில் இணைந்து நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, கண்ணன் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர், கண்ணனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தவெக நிர்வாகி கண்ணன் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

