தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் (17.09.2026) இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது.
இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதே சமயம் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டன.இதற்கிடையே, நேற்று (18,10.2026) சென்னையில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனால், சென்னைக்கு நேற்ற் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.10.2026) காலை 7:00 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இன்று காலை 10:00 மணி வரை தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையுடன் கூடிய லேசான இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையுடன் கூடிய லேசான இடி, மின்னல் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

