ஒன்றிய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் நாடு முழுவதும் திடீர் சோதனைகள் மேற்கொண்டன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில, மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் அதிரடி சோதனைகள் நடத்தின. இதில், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் உற்பத்தி மையங்கள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு வகையான மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மருந்துகளின் மாதிரிகள் ஆய்விற்குட்படுத்தட்டன. இந்த மாதிரிகளின் ஆய்வக சோதனைகளின் முடிவில், நாடு முழுவதும் 330 மருந்துகளின் மாதிரிகள் தரமற்றவை எனச் சுகாதார அமைச்சகம் அதிராகரப்பூரவாமக அறிவித்துள்ளது.
ஒன்றிய மருந்து ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டதில் 42 மருந்து மாதிரிகள் தரமற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, பல்வேறு மாநில அரசு மருந்து ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 288 மருந்து மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய சோதனைகளின்படி, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மருந்து மாதிரிகளே, இந்த பட்டியலில் கணிசமான அளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரமற்ற மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இந்த தரமற்ற மருந்துகள் உற்பத்தி மையங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தான் எனவும், சந்தையில் கிடைக்கும் மருந்து பொருட்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

