2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன.
இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான திமுக எம்.பி ஆராசாவின் ஆடியோ குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ''திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ஆ.ராசாவிற்கு காட்டவில்லை. கனிமொழி கைதாகும் வரை ஆ.ராசாவை கட்சி நிர்வாகிகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார். சமூக நீதி பேசும் திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதை அப்பட்டமாக ஒத்துக் கொள்கிறார் ஆ.ராசா. கலைஞர் டிவிக்கு பணம் சென்றதை ஆ.ராசா ஒப்புக்கொள்கிறார். கலைஞரின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியைப் போலத்தான் வைத்திருந்தார். இதையெல்லாம் சொன்னது திமுகவில் இருக்கக்கூடிய எம்.பி ஆ.ராசா.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சொல்கிறார் மு.க.ஸ்டாலின் அப்பா கலைஞரை இறுதிக் காலத்தில் கைதியைப் போல வைத்திருந்தார்கள் என்று சொல்கிறார். இணையதளத்தில் வந்த செய்தி இருக்கிறது. கலைஞரின் இறுதிக்காலத்தில் ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கு இடையே போட்டி ஏற்பட்டதால் தான் சட்டமன்றத் தேர்தல் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஸ்டாலினுக்கு தான் பெரிய மூளை இருக்கிறதா? டெல்லிக்கு போனால் இங்கிலீஷில் பேசிவிடுவாரா? அவர் தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கனிமொழியை ஒரு நாளும் நம்ப மாட்டார். என்னை எப்பொழுதும் கட்சியில் இருந்து வெளியே தள்ள முடியாது. என் செல்வாக்கு, என் கம்யூனிட்டி, என் அறிவு என்று எதையும் வெளியே தள்ள முடியாது என்ற ஆ.ராசாவின் பேச்சு சமூக வலைத்தளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் சொந்த அப்பாவையே அப்படி வைத்திருப்பவர் நாட்டு மக்களை என்ன பாடு படுத்துவார். சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் அப்பொழுதே சொன்னோம் யாரும் நம்பவில்லை. இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

