சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள 41 மாவட்டங்களுக்குமான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 22, 28 மற்றும் நவம்பர் 3, 14 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற்றன.
இதில், 37 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 37 மாவட்டங்களில் மொத்தமுள்ள 7,543 பஞ்சாயத்து சமிதி இடங்களில் 7,393 இடங்களுக்கான முடிவுகளும், 1,275 ஜில்லா பரிஷத் இடங்களில் 981 இடங்களுக்கான முடிவுகளும் வௌியாகி உள்ளன.
மாநில தேர்தல் ஆணையம் வௌியிட்ட தரவுகளின்படி, பஞ்சாயத்து சமிதியில் 3,701 இடங்களில் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. ஆளும் பாஜ 2,181 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், ஜில்லா பரிஷத் இடங்களில் காங்கிரஸ் 599 இடங்களை வென்றுள்ளது. பாஜ 301 இடங்களை பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியை தாண்டி, காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்ததலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் வசிக்கும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். பஞ்சாயத்துத் தேர்தல்களில் நீங்கள் காங்கிரஸ் கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை, இப்போது எங்கள் பொறுப்பாக மாறியுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெறும் ஒரு மாநிலத்தில் கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு, 'டபுள் என்ஜின்' ஆட்சிக்குக் கொடுக்கப்பட்ட நேரடிப் பதிலாகும். பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சித்தது. விவசாயிகளை நஷ்டத்திற்குத் தள்ளியது. மேலும் பஞ்சாயத்துகளின் அதிகாரங்களைப் பறித்தது. விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றால் கிராமங்கள் வெறிச்சோடிப் போயின.
இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டு, பொறுமையுடன் தாங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள், இப்போது தங்கள் குரலைப் பதிவு செய்துள்ளனர். இது ராஜஸ்தானின் தீர்ப்பு மட்டுமல்ல. இது நாட்டின் ஒவ்வொரு கிராமத்தின் குரலும் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

