Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஆளுநருக்கும், சோபா மாடல் அரசுக்கும் கடும் கண்டனங்கள்" - உதயநிதி விளாசல்!

"ஆளுநருக்கும், சோபா மாடல் அரசுக்கும் கடும் கண்டனங்கள்" - உதயநிதி விளாசல்!

மதுரையில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் இன்று (02.07.2026) நடைபெற்ற, ஐ.என்.ஏ,வின் "வேர்களைத் தேடி" கட்டுரை மற்றும் குறும்படப் போட்டியின் பரிசு வழங்கும் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் இவ்விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், இந்திய ராணுவத்தில் தனது அசாத்திய வீரம் மற்றும் சிறந்த சேவையாற்றியதற்காக கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் ஏ.

மீனாட்சி சுந்தரத்திற்கும் ஆளுநர் அர்லேகர் வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், அர்லேகர் ஆயுதப்படை வீரர்களை மதிப்போம் என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாப்போம் என்றும் வலியுறுத்தினார். மேலும், இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத வரலாறு, உலகமே ஒரு குடும்பம் மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகியவற்றின் கொள்கைகளை ஆளுநர் எடுத்துரைத்தார். அதோடு, வைகை நதியை மீட்டெடுப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த சோபா மாடல் அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம். ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் (Compromise) செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

கோப்புப்படம்

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்தி வாங்கும் (Panic buying) ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பதற்றத்தில் (anxiety) அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?. முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran