மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர், இன்று (25-07-26) பிரதமரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் பரிசீலித்து, பின்பு அதற்கான பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.
இதனிடையே, தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் (எக்ஸ்) சுய விவரத்தில் கல்வி அமைச்சர் என்பதை மாற்றி, நாடாளுமன்ற உறுப்பினர் (சாம்பல்பூர்) என்று மாற்றியுள்ளார். இதிலிருந்து, இவரது ராஜினாமா கடிதம் பிரதமரால் ஏற்கப்பட்டு, அவர் நிச்சயம் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில், அடுத்த கல்வி அமைச்சர் யார்? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. அடுத்த கல்வி அமைச்சராக யாரை நியமிப்பது? என்பது குறித்தான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.
இந்த ஆலோசனையில், சில குறிப்பிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது சம்பந்தமான தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

