தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், திமுகவின் பிரச்சாரப் பாடலான "ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பாடல் தவறுதலாக ஒலிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்காக எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்த போது பிரச்சார வாகனத்தில் இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பரப்புரை வாகனத்தில் திமுக பாடல் ஒலித்ததை கேட்ட உடனே ''ஏ என்னப்பா பாட்டு வருது'' என்று எடப்பாடி பழனிசாமி வினவினார். உடனே பாடலை நிறுத்தினர். எனினும், இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

