Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு" - உயர் நீதிமன்றம் உத்தரவு!

"அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு" - உயர் நீதிமன்றம் உத்தரவு!

மிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மரிய வில்சன், அங்கிருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்குச் சேதம்‌, ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காகப் பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்வதற்காக புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 10ஆம் தேதி) நேரில் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (09.07.2026) நீதிபதி இளந்தரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்பப் பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை சென்னை உயர்நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும், ஜூலை 13ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோர் சமரசத் தீர்வு மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதோடு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கும் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran