ஈரானுக்கு எதிரான போரில் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது அமெரிக்கா. ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில், இருதரப்பும் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.
ஏற்கனவே, ஈரான் மீது அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கடுமையான தாக்குதல்களை முன்னெடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் முக்கிய போர் விமானமான எப்-15 ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதன்படி, தாக்குதல் நடத்த வந்த அமெரிக்கப் போர் விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இரண்டு நபர்கள் பயணிக்கக் கூடிய இந்த ஜெட் விமானத்தில் இருந்த ஒரு விமானி அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்டார். விமானத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும், மற்றொரு விமானியை அமெரிக்க ராணுவம் தேடிவருகிறது.
இந்நிலையில், அமெரிக்க விமானத்தில் இருந்து குதித்த விமானியை உயிருடன் பிடித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தென்மேற்கு ஈரானில் அந்த விமானம் விழுந்த பகுதியில் ஈரான் ராணுவத்தினர், அந்த அமெரிக்க விமானியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதனிடையே, "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய இந்த போர் ஆட்சி மாற்றம் என்ற நோக்கத்திலிருந்து தடம் மாறி, தற்போது தங்களின் விமானிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது

