தன்னையும் தவெக நிர்வாகி மிரட்டுவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி திமுக எம்எல்ஏ பரபரப்பு புகாரை வைத்துள்ளார்.
அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் பேசிய காட்சிகள் வைரலாக இருந்தது. அதில் பேசிய பாலசுப்பிரமணியன், ''எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் ஆறு மாத்தில் தேர்தல் வரலாம் என்றெல்லாம் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். கோவில்பட்டி தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி அவர்களே நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 30 கோடி ரூபாய் செலவு செய்துதான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால் இனி நீங்கள் 300 ரூபாய் கூட இந்த தொகுதியில் சம்பாதிக்க முடியாது. அதற்கு விடமாட்டோம். இப்படித்தான் ஒருவர் இருந்தார் அவரும் எங்களிடம் வந்து விட்டார். அவரைப் போல நீங்களும் விரைவில் எங்களின் நோக்கி வர வைக்க ரிசைன் பண்ண வைத்து விடுவோம்'' என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்து 'என்னை ராஜினாமா செய்ய வைப்பதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனை எப்படி மிரட்டினார்களோ அதேபோல என்னையும் மிரட்டுகின்றனர். இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.

