Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

"அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

மிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் தொடர்பாக தவெக - திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 'பெரியார் மற்றும் கலைஞருடைய கனவுத் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திட்டம் உச்ச நீதிமன்ற தடையில் இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த திட்டத்தின் கீழ் எத்தனை தலித் சகோதரர்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? ஓபிசி சகோதரர்கள் எத்தனை பேருக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு எத்தனை கோயில் இருக்கிறார்கள்? அல்லது அந்த திட்டம் கைவிடப்பட்டதா? என்பதை திமுக சொல்ல வேண்டும்' என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு, 'இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வந்த போது, அதை நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்குகிறார்கள் என்ற கருத்தை அறிந்து ஞாயிற்றுக்கிழமை அந்த திட்டத்தை நிறைவேற்றி திங்கள்கிழமை நீதிமன்றத்திற்கு செல்வதே தடுத்த முதல்வர் எங்கள் முதல்வர். அதன் பிறகு ஏன் வழங்கவில்லை தொடர்ந்து என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பினார். உடனடியாக நல்மனம் படைத்தோர் உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார்கள். ஆகம கமிட்டி அதற்கு தீர்ப்பு சொல்லி எந்தெந்த திருக்கோயில்கள் ஆகமத்திற்குள் வருகிறது? எந்தெந்த திருக்கோயில்கள் ஆகமத்திற்கு வெளியே இருக்கிறது? என்று முடிவு தெரிந்த பிறகுதான் அந்த அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு வருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக இருவரை அந்த கமிட்டிக்கு தலைவராகவும் உறுப்பினராகவும் நியமிக்கின்றார்கள். அரசின் சார்பில் மூன்று பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

சமீபத்தில் கூட உச்சநீதிமன்றத்தில் ஆகம கமிட்டி இறுதி செய்ய வேண்டும் என்ற வழக்கு வந்தபோது, தனியாக அரசாணை போட்டு மூன்று வழக்கறிஞர்களை நியமித்து ஆட்சி இருந்த வரையில் சட்டப் போராட்டத்தை நடத்தினோம். இந்த ஆட்சிக்கு பிறகும் அந்த சட்ட போராட்டத்தை நாங்கள் நடத்த தயாராக இருக்கின்றோம். ஆகமம், ஆகமம் இல்லாத திருக்கோயில்களை முடிவு செய்கின்ற பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது. இந்த அரசு செயல்பட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அரசாணை நியமிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'என்ன அரசியல் என்று மக்களுக்கு புரிந்திருக்கும். அரசாணை பிறப்பித்தார்கள், அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்ற விழா நடத்தினார்கள், 32 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிவிட்டு வழக்கை போட்டது யாரென்று தெரியும். 5 வருடம் ஆட்சியில் இருந்தார்களாம், ஆனால் அந்த வழக்கில் வெற்றி பெறவே முடியாதாம்... இப்போது நம்மைப் பார்த்து வழக்கை நடத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். உறுதியாக நாங்கள் வழக்கில் வெற்றி பெற்று அந்த திட்டத்தை பெரியார் வழியில் செயல்படுத்துவோம். ஆனால் இதில் உள்ள அரசியல் என்னவென்றால் சில மதவாதகளின் அழுத்தத்தால் வழக்கை போட வைத்து இவர்களே ட்ரா செய்தார்கள். அதில் குறிப்பாக அண்ணன் சேகர்பாபு பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் மட்டும் சொல்லிவிட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். 5 வருடம் அந்த வழக்கை ஜெயிக்கவே இல்லை. எந்த திட்டமாக இருந்தாலும் அது பேப்பரில் தான் இருக்கிறது' என்று ஆவேசமாகப் பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran