காங்கிரஸ் மூத்த தலைவர், நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட சோனியா காந்தியின் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியில் பிறந்து இந்திய நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவராக மாறியவர் சோனியகாந்தி. இவரது அரசியல் பயணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இவருடைய சுயசரிதை 'பிலாங்கிங்; ஏ ஜெர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகம் விற்பனையில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும், இவரது அரசியல் பயணம் உலக அளவில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், இத்தாலியில் சோனியா காந்தி பிறந்து வளர்ந்த பூர்விக வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனெட்டோ பிராந்தியத்தில் உள்ள லூசியானா கிராமத்தில் அமைந்துள்ள சோனியா காந்தியின் பூர்வீக வீட்டை, சுக்தேவ் சிங் காங் என்ற சீக்கிய தொழிலதிபர் வாங்கினார். மைனோ குடும்பத்திற்குச் சொந்தமான, ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டை சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு வாங்கியிருந்தார்.
இத்தனை ஆண்டுகளாக அவர் பராமரித்து வந்த வீட்டை, தற்போது அருங்காட்சியகமாக மாற்ற முடிவெடுத்துள்ளார். சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்; ஏ ஜெர்னி ஆஃப் லவ்' உலக அளவில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்பகால வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாக இந்த வீட்டை மாற்றத் தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளதாக சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

