தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகம் 104 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலையும் பெற்று மொத்தம் 107 இடங்களுடன் முன்னணியில் உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக திராவிட முன்னேற்றக் கழகம் 58 வெற்றிகள் மற்றும் 2 இடங்களில் முன்னிலையுடன் மொத்தம் 60 இடங்களைப் பிடித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 46 இடங்களில் வெற்றியும், ஒரு இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சி 3 வெற்றிகள் மற்றும் ஒரு இடத்தில் முன்னிலையைப் பெற்றுள்ளது.
அதே சமயம் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 26 இடங்களுக்கான நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களை வென்று முன்னணியில் உள்ளது. தி.மு.க 5 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும், தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களையும் வென்றுள்ளன. அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 81 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கேரளா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களை வென்று முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 199 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது; அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 69 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

