Dailyhunt
"அது தனிப்பட்ட விஷயம்" - காங்கிரஸ் வேட்பாளரின் தடாலடி பதில்

"அது தனிப்பட்ட விஷயம்" - காங்கிரஸ் வேட்பாளரின் தடாலடி பதில்

கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, இந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், கேரளத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் பாலக்காடு ஒரு நட்சத்திர தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், இங்குக் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் பிஷாரடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் ரசாக்கும், பாஜக கூட்டணி சார்பில் ஷோபா சுரேந்திரனும் களம் காண்கின்றனர். இங்கு, மும்முனைப் போட்டி நிலவுவதால் இந்தத் தொகுதியில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன் பாலக்காடு தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் மீதான பாலியல் புகார் குறித்து ரமேஷ் பிஷாரடியிடம் நிருபர்கள் கேட்டபோது, "அது அவருடைய தனிப்பட்ட விஷயம்" என்று கூறினார்.ரமேஷ் பிஷாரடியின் இந்த கருத்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அந்த செயலை ஆதரிக்கும் விதமாகவும் இருப்பதாகவும் கூறி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், தன் மீது பாஜக அளித்துள்ள புகார் குறித்து ரமேஷ் பிஷாரடி கூறுகையில், ''பாஜவுக்கு எப்போதும் விவாதங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வது வழக்கமாக இருக்கிறது. என் மீது எதற்காக அவர்கள் புகார் கொடுத்துள்ளனர் என்பது இங்குள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும். தோல்வி பயம் தான் அதற்கு ஒரே காரணம். ராகுல் மாங்கூட்டத்தில் குறித்து நான் சொன்ன கருத்து எப்படி பெண்களை அவமானப்படுத்துவதாக அமையும் என்று எனக்குப் புரியவில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ரமேஷ் பிஷாரடி வடக்குந்தரை என்ற பகுதிக்குப் பிரசாரம் செய்யச் சென்றபோது பாஜவினர் அவரை தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran