திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம் இன்று (04.04. 2026) காலை நடைபெற்றது.
இதில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், 'இப்போது, புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத் திருத்தம்! அதாவது, எப்.சி.ஆர்.ஏ. (FCRA) மசோதா. இதற்காகவும் தமிழ்நாட்டில் இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாள் முன்பே, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். நேற்று, மீண்டும் பிரதமருக்கு அரசின் சார்பில் விளக்கமாக நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்தச் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவச் சமுதாய மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். சான்றுகளைச் சமர்ப்பிப்பதில் சிறிய தாமதம் உள்ளிட்ட பிற காரணங்களைச் சுட்டிக் காட்டி, ஒரு அமைப்பின் அங்கீகாரத்தை இரத்து செய்து, அவர்களிடம் இருக்கும் நிதியையும், சொத்தையும் பறித்துக் கொள்ள இந்த கொடுங்கோல் சட்டம் வழிவகுக்கிறது. சொத்து என்றால், மக்களுக்குச் சேவையாற்றும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் இவைதான். இன்னும் கொடுமை என்னவென்றால், பாதி நிதியை வெளிநாட்டில் இருந்து பெற்று, மீதியை உள்நாட்டில் இருந்து பெற்று உருவாக்கிய சொத்துகளைக் கூட, இந்தச் சட்டம் வந்தால் முடக்கிவிட முடியும். பிரதமர் மோடி கண்துடைப்புக்காக, பல கிறிஸ்தவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஏழைகளின் கல்விக்காகவும் - மருத்துவத்துக்காகவும் அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் பாராட்டிப் பேசியிருக்கிறார்.ஆனால், இப்போது என்ன செய்கிறார்? இதுதான், அவரது உண்மையான முகம்.
இப்போது திடீர் என்று இப்படி ஒரு தன்னிச்சையான கொடுங்கோல் சட்டத்தை கொண்டு வந்தால், குறிப்பாக, பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நிதி தருவதற்கு முன்வருபவர்களையும் அச்சுறுத்துவது மாதிரியான பிரிவுகள் இந்தச் சட்டத் திருத்தத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ கல்வி, மருத்துவ அமைப்புகள் இயங்கி வருகிறது. அவையெல்லாம் இல்லாமல் போனால், அரசால் அவர்கள் செய்து வரும் சேவையை, உடனே இட்டு நிரப்ப முடியாது என்பதையும் என்னுடைய கடிதத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மொத்தத்தில், இந்தச் சட்டத் திருத்தம், மத சுதந்திரம் மற்றும் சமூக சேவை செய்ய விரும்பும் மக்கள் மீதான கடுமையான தாக்குதல். அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளைப் பறிக்கும் செயல்.
கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் - தேவாலயங்கள் அதிகம் இருக்கும், கேரளம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் காரணத்தினால், இப்போதைக்கு பயந்து போய் பா.ஜ.க. அரசு சற்று பின்வாங்கி இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டம் ஆக்குவதுதான் பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களால் இந்துக்களும்தான் அதிகம் பயனடைகிறார்கள். மதவெறிப் பார்வையுடன் மனிதநேயச் செயல்பாடுகள் மேல் தொடுக்கும் இந்தத் தாக்குதல், ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது! இந்தியா மேல் உலக அளவில் அழிக்க முடியாத களங்கத்தை இந்தச் சட்டம் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நாடாளுமன்றமே முடங்கும் அளவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள்.
இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள் பழனிசாமி அவர்களே... இந்த எப்.சி.ஆர்.ஏ. (F.C.R.A.) சட்டத் திருத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?. இல்லை, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, அடுத்து கிறிஸ்தவ மக்களுக்கும் துரோகம் செய்யத் தயார் ஆகிவிட்டீர்களா? நேற்று ஒரு கூட்டத்தில் பழனிசாமி பேசியிருக்கிறார். சிறுபான்மையினரைக் கண்ணை இமை காப்பது போன்று, அ.தி.மு.க. காக்கும் என்று சொல்கிறார். இப்போது எப்.சி.ஆர்.ஏ. (FCRA) - வுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

