Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
படகில் வந்த 1.700கி தங்கக் கட்டிகள் காரில் பிடிபட்டது; கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணை!

படகில் வந்த 1.700கி தங்கக் கட்டிகள் காரில் பிடிபட்டது; கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணை!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளும் கடல்மார்க்கமாக கடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்த கடத்தல்களுக்கு தமிழ்நாடு கிழக்கு கடற்கரை பகுதிகளான நாகை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் பகுதியை சர்வதேக கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து விலை உயர்ந்த போதைப் பொருட்களும் தமிழ்நாடு கிழக்கு கடற்கரைக்கு கொண்டு வந்து அங்கிருந்து இரவு நேரங்களில் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதில் சில நேரங்களில் கடத்தல்காரர்கள் பிடிபடும் போது அந்த இடத்தில் பொருளுடன் உள்ளவர்கள் கைதோடு நின்று விடுகிறது. ஆனால் யார் கடத்தலுக்கு முதலாளி என்பது இதுவரை பிடிபட்டதில்லை. அதனால் அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு கடல் பகுதி வழியாக தங்கம் கடத்தல்கள் குறைந்திருந்தது. அதாவது 7, 8 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒரு முறையாவது சுங்கத்துறை அதிகாரிகளால் 10, 20 கிலோ என்று கடத்தல் தங்கம் பிடிபட்டது. ஆனால் சில ஆண்டுகளாக தங்கம் பிடிபடவில்லை.

இந்த நிலையில் தான் திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து திருச்சி நோக்கி கடத்தல் தங்கம் கொண்டு செல்வதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் காத்திருந்தனர். நேற்று இரவு திருச்சி கன்டோன்மெண்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு எட்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் கார்பன் பேப்பர் மற்றும் கருப்பு டேப் ஒட்டிய 8 தங்கக் கட்டிகளை கைப்பற்றி தங்கக் கட்டிகளை கடத்தி வந்த ராமநாதபுரம் மண்டபம் கிழக்குத் தெரு சாதிக் மகன் சையது நபில்கான் என்பவரை கைது செய்து கஸ்டம்ஸ் அலுவலகம் அழைத்துச் சென்று கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளை எடை வைத்த போது 1 கிலோ 715 கிராம் தங்கம் இருந்தது. தொடர்ந்து, சையது நபில்கானிடம் இந்த தங்க கட்டிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதில், 'என்னிடம் ஒரு பார்சல் கொடுத்து திருச்சி கொண்டு போனால் உன்னிடம் வந்து வாங்கிக் கொள்வார்கள் என்று சொன்னார்கள். யார் வருவார்கள் என்று தெரியாது' என்று நபில்கான் கூறியுள்ளார். இது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு பல பிரிவுகளாக பிரித்து அனுப்பியதில் ஒருவர் கொண்டு வந்த தங்கம் மட்டுமே சிக்கியுள்ளது. மீதி யார் யார் எங்கே கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran