தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவுப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
அப்போது பால் கொள்முதல் விலை தொடர்பாக 110 விதிகளின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், 'பால் உற்பத்தி கிராம பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டறவுச் சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலை லிட்டர் 1க்கு கூட்டறவு சங்கம் மூலமாக ரூ.1 உயர்த்தவும் மேலும் அரசு ஊக்கத்தொகை ரூ.3லிருந்து ரூ.5ஆக உயர்த்தவும் முடிவு செய்து மொத்தம் 1 லிட்டர் கொள்முதல் விலை ரூ.38லிருந்து ரூ.41ஆக உயர்த்தி 19.08.2026 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தோம்.
இந்த சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசு தீவனம், உளர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு கூட்டறவு மற்றும் பால் உற்பத்தியாளர்கள், நலச்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. எனவே அந்த கோரிக்கையை கணிவுடன் பரிசீலனை செய்து நமது அரசு பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலை லிட்டர் 1க்கு ரூ.38லிருந்து ரூ.41ஆக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் ரூ.3யை உயர்த்தி ரூ.44ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பால் கொள்முதல் விலையினால் ஏற்படும் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்து வழங்கும். இதனால் கூடுதலாக மொத்தம் 1 மாதத்திற்கு ரூ.60 கோடியும், 1 ஆண்டிற்கு ரூ.720 கோடியும் செலவாகும்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் மின் நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத்துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின் கட்டமைப்பு அவசியமாகிறது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு மின் நுகர்வு மையங்களுக்கு திறம்பட கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பு மேம்படுத்த அவசியமாகிறது. இதற்காக அரசு தொலைநோக்கத்துடன் ரூ.33,066 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15,000 கி.மீ நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைத்துக்கொள்வதுடன் ஏற்கெனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்' என்று அறிவித்தார்.

