இன்று சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா கூறிய ஒரு கருத்து சர்ச்சை ஆனது.
அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.அப்போது ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோர் அதற்குரிய விளக்கத்தை கொடுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி இப்பிரச்சினை லாபகமாக கையாண்டார் எனலாம். அவர் ஆவேசமாக முன்னேறிய திமுகவின் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனை சத்தம் போட்டு இருக்கைக்கு செல்லுமாறு கூறினார். அவரும் அந்த வேண்டுகோளை ஏற்று வந்து விட்டார்.
அடுத்து ரிஷிவந்தியம் தொகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை உரிமையுடன் முதுகில் தட்டி அமைதி காக்குமாறு சமாதானப்படுத்தினார். எ.வ. வேலு அவர்களுக்கு உதவும் வகையில் இதர திமுக உறுப்பினர்களையும் அமைதிப்படுத்தினார். அதன் பிறகு சபாநாயகரிடம் அனுமதி கேட்டு அவர் ஆற்றிய உரை ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தினரையே யோசிக்க வைத்து விட்டது. குறிப்பாக அவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன் எழுந்து முஸ்தபா பேசிய பேச்சு சர்ச்சைக்குரியதாக இருந்தால் அவை குறிப்பிடுவது நீக்கிவிடலாம் என சபாநாயகர் இடம் சொல்லும் அளவுக்கு சென்றது.
பதற்றத்தை தூண்டுவது ஆளுங்கட்சியினரின் நோக்கமல்ல என முதலிலேயே தவெக விரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அவரது சிறந்த அணுகுமுறையாக இருந்தது. முஸ்லிம் இட ஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவின் ஆட்சியில் போடப்பட்ட ஆணையத்தையும், அதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணையையும், கலைஞரின் சிநேகத்தையும் குறிப்பிட்டார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பையும் நேர்மையுடன் பதிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஜே.எம் ஹாரூன், இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த அப்துல் லத்தீப் சாகிப் ஆகியோரையும் குறிப்பிட்டார். அன்று கலைஞர் ஆட்சியில் சட்டசபையில் இதற்கு ஆதரவளித்து இட ஒதுக்கீடு அரசாணைக்கு துணை நின்ற அனைத்துக் கட்சிகளையும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார். இது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். இப்பிரச்சினைய வெறும் அரசியல் பார்வையோடு மட்டும் அணுகாமல், ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையாக கருதி சகல தரப்பையும் அமைதிப்படுத்தும் வகையில் செயல்பட்டது தமிமுன் அன்சாரியின் தலைமைத்துவத்தை வெளிக்காட்டு வகையில் இருக்கிறது.
பதட்டமான நேரங்களில் ஒரு சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தனது சொற்பொழிவு மூலமும், செயல் மொழி மூலமும் உதாரணமாக இருக்கிறார். மேலும் இந்து, முஸ்லீம் உறவுகளைப் பற்றியும் உயர்வாக கூறி நம்முடைய தமிழ்நாடு இப்படித்தான் இருக்கிறது என்ற யதார்த்தத்தையும்,சட்டமன்றத்தில் பேசுவது சட்டமன்றத்திற்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதித்துவிடக்கூடாது என்ற அக்கறையை அவர் வெளிக்காட்டியதையும் குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தில் சபையில் பரபரப்பு எல்லாம் முடிந்த பிறகு அவரை அழைத்து சபாநாயகர் ஏதோ பேசியதையும், அப்போது திமுகவை சேர்ந்த எ.வா வேலு அவர்களும், அதிமுகவை சேர்ந்த எஸ் பி வேலுமணி அவர்களும் உடனிருந்து சிரித்ததையும், பேசியதையும் பார்க்க முடிந்தது. அறிவும், ஆற்றலும், உயர்குணமும், தரமும் கொண்டவர்களால் தான் சட்டசபையும், நாடாளுமன்றமும் சிறப்படைகின்றன.

