Dailyhunt
பாட்டியுடன் துணி துவைக்க சென்ற சிறார்களுக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய சிலாவட்டம்

பாட்டியுடன் துணி துவைக்க சென்ற சிறார்களுக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய சிலாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் துணி துவைக்கச் சென்ற பாட்டி மற்றும் பேரன், பேத்தி ஆகியோர் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய பேரன் தஷ்வந்த் (13) மற்றும் பேத்தி கௌசிகா (11) ஆகியோர் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பாட்டி சாந்தி அந்த பகுதியில் உள்ள கிணற்று பகுதிக்கு துணி துவைக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது பேரன் தஷ்வந்த் மற்றும் கௌசிகா இருவரும் பாட்டியுடன் சென்றுள்ளனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக பேரன் தஷ்வந்த், பேத்தி கௌசிகா ஆகிய இருவரும் கிணற்றில் கால் இடறி விழுந்த நிலையில் அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி சாந்தியும் அவர்களை காப்பாற்ற கிணற்றில் இறங்கியுள்ளார். இந்நிலையில் மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாட்டி, பேரன், பேத்தி என மூன்று பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran