Dailyhunt
பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய் ? ஆட்சி அமைப்பதிலுள்ள நெருக்கடிகள்!

பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய் ? ஆட்சி அமைப்பதிலுள்ள நெருக்கடிகள்!

ல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி என்பது போல, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சி அமைப்பதில் இழுபறியை எதிர் கொண்டிருக்கிறது தவெக.

இதனால், விஜய்யால் முதலமைச்சராக முடியுமா? என்கிற கேள்வி தமிழக அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும். தற்போது 108 இடங்களில் மட்டுமே தவெக ஜெயித்திருக்கிறது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்தாக வேண்டும்.

அதன்படி பார்த்தால், தவெகவின் பலம் 107 மட்டுமே. மேலும், தவெக எம்.எல்.ஏ.க்களில் இருந்து ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவர். அவரையும் கழித்து விட்டால், சட்டமன்றத்தில் தவெகவின் வலிமை என்பது 106 ஆக மட்டுமே இருக்கும். இதனையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், பெரும்பான்மையை நிரூபிக்க 12 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்குத் தேவை. இந்த 12 எம்.எல்.ஏ. க்களை எங்கிருந்து வாங்க முடியும்? திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளிடமிருந்துதான் பெற முடியும். அப்படிப் பார்த்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5, இடது சாரிகள் 4 (சி.பி.ஐ., சி.பி.எம். தலா 2) , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, விசிக 2, தேமுதிக 1 என 14 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இந்த 14 பேரில், விஜய்யை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. இடது சாரிகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை இல்லாத கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற விரும்பவில்லை என்றும், தேவைப்பட்டால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் விஜய்யிடம் தெரிவித்து விட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்து தேமுதிக பிரேமலதா விரும்பினாலும் அவரை கூட்டணி ஆட்சியில் இணைத்துக்கொள்ள விஜய்யை சுற்றியிருப்பவர்கள் விரும்பவில்லை. அடுத்து விசிகவிடம் 2 இடங்கள் இருக்கிறது. விஜய்யை ஆதரிக்க திருமா முன்வரலாம். மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் விஜய்யை ஆதரிக்கவில்லை. இதனை வைத்து பார்த்தால் காங்கிரஸ் 5, விசிக 2 , இடதுசாரிகள் 4 என 11 எம்.எல்.ஏ.க்கள் தான் வருகிறார்கள். அதனால் மீண்டும் 1 சீட் தேவைப்படுகிறது. இந்த 1 சீட்டுக்காக அதிமுக கூட்டணி பக்கம் விஜய்யின் பார்வை திரும்பும். அதிமுக கூட்டணியில் பாமக 4, பாஜக 1, அமமுக 1 என 6 இடங்கள் இருக்கிறது. இதில் பாஜக மற்றும் அமமுக கட்சிகள் விஜய்யை ஆதரிக்கவில்லை. மீதம் இருப்பது பாமக தான். பாமக, விஜய்யை ஆதரிக்க முன் வரலாம். ஆனால், பாமக தலைவர் அன்புமணி, அதற்காக வைக்கும் டிமாண்ட் பெரிதாக இருக்கிறது. இதனை விஜய் ஏற்பாரா? என்று தெரியவில்லை.

ஒருவேளை ஏற்றுக்கொண்டால், பாமகவின் ஆதரவை விஜய் பெறுகிறபோது, கூட்டணி ஆட்சியில் பாமக வந்தால் அதனை விசிக விரும்பாது. ஏனெனில் பாமக இருக்கும் கூட்டணியிலேயே நாங்கள் இருக்க மாட்டாம் என்று அழுத்தம் திருத்தமாக தேர்தல் களத்தில் சொன்ன திருமாவளவன், விஜய்யின் கூட்டணி ஆட்சியில் பாமக இணைந்தால் அதனை எப்படி ஜீரணித்துக் கொள்வார்? அதனால், பாமக வரும் பட்சத்தில் விசிக ஆதரவு தராது. இதைவைத்து கணக்கிட்டால், காங்கிரஸ் 5, பாமக 4, இடதுசாரிகள் 4 என மொத்தம் 13 சீட்டுகள் கிடைக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு தேவைப்படுவது 12 இடங்கள்; கிடைப்பது 13 இடங்கள். மயிரிழையில் ஆட்சியை அமைத்து விட முடியும். இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விஜய்க்கு எதிராக அரசியல் செய்து வெற்றிப்பெற்ற பாமக, பதவிக்காக விஜய்யை ஆதரித்தால் அதனை பாமகவுக்கு வாக்களித்த மக்களும், வாக்களித்த கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜகவினரும் எப்படி ஜீரணிப்பார்கள்? அதனால், விஜய்யை ஆதரிக்கக் கூடாது என அதிமுகவும் பாஜகவும் அன்புமணிக்கு நெருக்கடிக் கொடுத்தால், ஆதரவு நிலையிலிருந்து பாமக விலக நேரிடும்.

இந்த நிலைப்பாட்டை பாமக எடுத்தால் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்யால் முடியாது. ஆக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள தோழமைக்கட்சிகளின் பலத்தை வைத்து தவெக முயற்சிப்பதில் இவ்வளவு சிக்கல் இருப்பதால், அடுத்து என்ன வழிகள் இருக்கின்றன? இரண்டு வழிகள் தான் இருக்கிறது. 1. திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அக்கட்சிகளை உடைக்க வேண்டும். அதாவது, 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டும். நடைமுறையில் இது விஜய்க்கு சாத்தியப்படுமா? நிச்சயம் சாத்தியமே இல்லை. அந்த வகையில், பிரதான கட்சிகளை உடைப்பது இயலாதது. 2. அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவை நேரடியாக விஜய் கேட்க வேண்டும். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுகவை மற்றும் பலர் என விமர்சித்திருப்பதால் அதிமுகவின் ஆதரவை விஜய் கேட்பது சந்தர்ப்பவாதமாக விமர்சிக்கப்படும். அதனால், அதிமுக ஆதரவை கேட்க விஜய் முன்வருவாரா? என்பது கேள்விதான். ஒரு வேளை, சந்தர்ப்பவாதமாக விமர்சிக்கப்பட்டாலும், பரவாயில்லை என நினைத்து அதிமுகவின் ஆதரவை விஜய் கேட்டு, அதற்கு எடப்பாடி உடன்பட்டால், எந்த பிரச்சனையும் நெருக்கடியும் விஜய்க்கு ஏற்படாது. விஜய் முதலமைச்சராகி விடலாம். ஆனால், விஜய்க்கு வெளியில் இருந்து தான் ஆதரிப்பதாகத்தான் எடப்பாடி சொல்வார். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவை இடம்பெற செய்ய மாட்டார். காரணம், அதிமுகவினரை அமைச்சர்களாக்கி விட்டு பிறகு அவர்கள் தமக்கு எதிராக வளர்வதை எடப்பாடி விரும்புபவரல்ல!

இப்படியிருக்கும் நிலையில், தவெகவை ஆதரிக்கப்போவதில்லை என்று விசிக தலைவர் திருமா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை எப்படியெல்லாம் பெறுவது என தவெகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran