Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிச்சாவரம் காடுகளில் தேனீ வளர்ப்பு திட்டம்

பிச்சாவரம் காடுகளில் தேனீ வளர்ப்பு திட்டம்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழு இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மீனவர்களுக்கு கட்டம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, பிச்சாவரம் மாங்குரோவ் தேன் (தேன்) ஹனீ என்ற பெயரில் தேன் பதப்படுத்தி, பொதியிட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு நிலையான வருமானம் கிடைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதார மேம்பாடும் ஏற்படும் என ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்ந்து, இவர் ரூ.14.07 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்வாகக் கட்டிடம், பயணிகள் நிழற்கூடம், உணவகம், கடைகள், தொலைநோக்குக் கோபுரம், வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும், தெற்கு பிச்சாவரம் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பிச்சாவரம் உப்பனாறு வடிகால் மற்றும் ஒழுங்கியம் மறுசீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் நிறைவடைந்தால் வெள்ளநீர் விரைவாக வடிவதுடன், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கடல்நீர் உட்புகுவதால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், பாசன மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுவதோடு, பொதுமக்களின் போக்குவரத்தும் பாதுகாப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran