Dailyhunt
"பிரதமர் நரேந்திர மோடிக்குத் தைரியம் இல்லை" - கேரள பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு

"பிரதமர் நரேந்திர மோடிக்குத் தைரியம் இல்லை" - கேரள பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு

கேரளத்தில் ஏப்ரல் 9 அன்று மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இடதுசாரி கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டி காங்கிரஸ் கூட்டணியும் பல்வேறு வியூகங்களை வகுத்துத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த சட்டமன்ற தேர்தலுக்காகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்கே, ராகுல்காந்தி மற்றும் சசிதரூர் போன்றோர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதில், "பிரதமர் ஒரு கோழை. அவருக்கு முதுகெலும்பில்லை. தேசத்தின் எரிபொருள் சார்ந்த விவகாரங்களில் அவர் சமரசம் செய்துகொண்டார். எப்ஸ்டின் கோப்புகளில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளதால், அவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார். நாட்டிற்காகக் குரல் கொடுக்க அவருக்குத் தைரியம் இல்லை. அதனால், நாம் தான் அதற்கான விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்ற அவரது தலைமையிலான அரசு தவறிவிட்டது.

ஆளும் இடதுசாரி அரசும், பாஜகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. இடதுசாரி கூட்டணி பாஜகவின் பி டீமாக செயல்படுகிறது. அந்த கூட்டணியில் உள்ள எந்த தலைவர்கள் மீதாவது அமலாக்கத்துறை அல்லது சிபிஐ போன்ற அமைப்புகள் வழக்குப் பதிந்துள்ளதா? அல்லது விசாரணை மேற்கொண்டதா? இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் சமரசம் செய்துகொண்டுள்ளனர். அதனால், மாநில மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்த விவகாரங்களில் இடதுசாரி அரசு அலட்சியமாக இருந்துள்ளது.

குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், மருத்துவத் துறை சீர்கேடு அடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran