ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் ஜூலை 4 முதல் 9 வரை நடைபெற உள்ளது.
தலைநகர் தெக்ரானில் இந்த இறுதிச் சடங்கு ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது. இறுதியாக ஜூலை 9 அன்று மஷாத் நகரில் அவரது சொந்த ஊரில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஈரான் தரப்பில் இருந்து, இந்த சடங்கில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து வெளிநாடுகளின் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் இந்தியா சார்பாக தங்களது அஞ்சலியைச் செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவுக்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஈரானுக்குச் செல்லவுள்ள காங்கிரஸ் குழுவை இறுதி செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஈடுபட்டுள்ளார். அண்மைக்காலங்களில் ஈரானில் நடைபெற உள்ள மிகப்பெரிய அளவிலான அரசு நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்கு பெரும்பாலான நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணும் வகையிலான ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

