அமெரிக்கா-ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஈரான் மீறியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இனி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை. அப்படி பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். அதைச் செய்ய நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில், இரு தரப்பிற்கும் இடையே 60 நாட்களுக்கான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஹார்மோஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது அமெரிக்காவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, உலக நாடுகளுடன் ஈரான் எண்ணெய் வர்த்தகம் செய்துகொள்ளும் வகையில், பொருளாதாரத் தடையைத் தற்காலிகமாக நீக்குவதாக அமெரிக்க அறிவித்திருந்தது. இப்போது, அந்த தற்காலிகமாகத் தடை நீக்கத்தை அமெரிக்க ரத்து செய்துள்ளது.
மேலும், ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இதில், 80 க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச வர்த்தக வழித்தடத்தில் நடைபெறும் உலகளாவிய வர்த்தக போக்குவரத்தின் மீது, ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த தக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் படைகளின் இந்த தேவையற்ற ஆக்கிரமிப்பு செயல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. அதே நேரத்தில், இந்த ஆபத்தான செயல் சர்வதேச கடல் வழி போக்குவரத்தினை சீர்குலைப்பதாகவும் உள்ளது. இந்த ஒப்பந்தம் முறையாகப் பின்பற்றப்படாத போதோ அல்லது மீறப்படும்போதோ அதற்கு ஈரானைப் பொறுப்பேற்கச் செய்வதற்கு அமெரிக்கப் படைகள் எப்போதும் ஆயத்த நிலையில் உள்ளன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ' கடந்த மூன்று வாரங்களில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல்கள் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1 மற்றும் 2 ஆகிய விதிகளை மீறியுள்ளது. ஈரான், தங்களது தேசிய நலன்களையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய எப்போதும் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த போக்கு மீண்டும் இரு தரப்பினரிடையே கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

