Dailyhunt
எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்; சரிந்த திமுகவின் சென்னை கோட்டை!

எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்; சரிந்த திமுகவின் சென்னை கோட்டை!

மிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று (04-05-26) காலை 8 மணிக்கு விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தவெக வசம் தற்போது சுமார் 108 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மீதம் 10 தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம் இந்த தேர்தலில், தவெக தலைவர் விஜய் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக திமுக கோட்டை என்று அறியப்படும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளை தவெக வென்றுள்ளது. குறிப்பாக 1977இல் திமுகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரின் அதிமுக கூட சென்னை நகரத்தில் 1 தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் சென்னை மண்டலத்தில் திமுக பெரும்பான்மை இடங்களைத் தக்க வைத்தது. அதிமுக சில இடங்களை முன்னேற்றம் காட்டினாலும், முழு மண்டலத்தையும் கைப்பற்றவில்லை. சென்னை நகரம் தொடர்ந்து திமுகவின் கோட்டையாகவே இருந்தது.

அதனை தொடர்ந்து, 1991இல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சென்னை மண்டலத்தில் 14 இடங்களை வென்றார். சென்னை கோட்டை என்று அழைக்கப்பட்ட சென்னையில் முதல் முறையாக அதிமுக பெற்ற தேர்தல் இது தான். இதையடுத்து, 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதே போல், சென்னையின் 14 இடங்களை வென்றார். 2011க்குப் பிறகு 2016 தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தாலும், சென்னையின் முழு மண்டலத்தையும் கைப்பற்றவில்லை. இப்படியாக சென்னை மண்டலம் திமுகவின் கோட்டையாக இருந்த வேளையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் ஆகிய தொகுதிகள் தவிர 14 இடங்களையும் புதிதாக வந்த விஜய்யின் தவெக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அதே போல், திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளும் போட்டியிட்ட முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு வங்கியின் சாதனையை, புதிதாக கட்சித் தொடங்கிய தவெக தலைவர் விஜய் முறியடித்துள்ளார். 1949இல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தலைமையில் தொடங்கப்பட்ட திமுக, 1952இல் முதல் முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 14 சதவீத வாக்குகளை திமுக வென்றது. அதன் பின்னர், 1962 தேர்தலில் தான் அவர்கள் முழு அங்கீகாரத்துடன் 27.1% வாக்குகளைப் பெற்று 50 இடங்களை வென்றது. திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர், 1972இல் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கி 1977 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட அந்த தேர்தலில் அதிமுக, சுமார் 30.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. இந்த 1977 தேர்தல் தான். தமிழ்நாடு அரசியலில் இரு திராவிடக் கட்சிகள்யுகத்தை தொடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அதன் பின்னர் எந்த சினிமா நடிகர், அரசியலில் குதித்து கட்சி தொடங்க ஆரம்பித்தாலும், எம்.ஜி.ஆர் பெற்ற சாதனையை மட்டுமே ஒப்பிட்டு விவாதங்கள் வைக்கப்படும். சரத்குமார், கார்த்தி, விஜயகாந்த் என இந்த பட்டியல் நீளும். ஆனால் முதல் முறையாக சினிமா நடிகரான விஜய், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் பெற்ற 30.4% வாக்கு சதவீதத்தை முறியடித்து 34.92 வாக்கு சதவீதத்துடன் சாதனைப் படைத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran