Dailyhunt
"என் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன" - த.வெ.க. தலைவர் விஜய் தகவல்!

"என் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன" - த.வெ.க. தலைவர் விஜய் தகவல்!

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் தனது வேட்புமனுவை நேற்று (02.04.2026) தாக்கல் செய்தார்.

இதனையடுத்து திருச்சி கிழக்கில் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாடலை பாடி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் தன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். அதில், 'மதுரையில் கடந்த ஆண்டு (2025) நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது பாதுகாவலர்களைத் தள்ளியதில் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில் தன் மீது வழக்கு உள்ளது.

கொளத்தூரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தன் மீது மற்றொரு வழக்கு உள்ளது' எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மதுரை மாநாட்டின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரத்தை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் விஜய் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

அதாவது 5 ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும், பிரச்சாரத்தின் போது பொதுப் பாதையைப் பயன்படுத்துதல், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran