Dailyhunt
எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி; வீட்டிலிருந்தே பணியாற்ற மலேசிய அரசு அனுமதி

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி; வீட்டிலிருந்தே பணியாற்ற மலேசிய அரசு அனுமதி

ரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக, இலங்கையில் எரிபொருள் பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும், அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, எரிபொருள் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளும் விரைவில் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் சூழலை எதிர்நோக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இதனிடையே, மலேசியாவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, வீட்டில் இருந்து பணியாற்ற மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு நிறுவனம் மற்றும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, விநியோகத்தை நிலையாக வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நாட்கள் செல்ல செல்ல மேற்காசியப் பிராந்தியத்தில் போர் உக்கிரமடைந்து வருவதால் இன்னும் வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, இந்த சிக்கலான சூழலிலிருந்து தற்காத்துக்கொள்ள மலேசிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran