Dailyhunt
'ஹன்டா' வைரஸ் பரவலால் பீதி; நடுக்கடலில் தத்தளிக்கும் 144 பயணிகள்

'ஹன்டா' வைரஸ் பரவலால் பீதி; நடுக்கடலில் தத்தளிக்கும் 144 பயணிகள்

டந்த மார்ச் மாதம் அர்ஜெண்டினாவில் இருந்து புறப்பட்ட 'ஹோண்டியஸ்' என்ற சொகுசு கப்பலில், தற்போது 'ஹன்டா' எனும் கொடிய வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்து, அட்லாண்டிக் கடலின் அழகை ரசிக்கச் சென்ற பயணிகள், தற்போது பெரும் அபாய சூழலில் உள்ளனர்.

இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் இதுவரை இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே ஒரு டச்சு தம்பதி மற்றும் ஒரு ஜெர்மனி பயணி என மூவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 144 பயணிகள் இன்னும் அந்தக் கப்பலிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த தோற்றால் கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் மீட்கப்பட்டு, தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது இந்த கப்பல் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான கேப் வெர்டே அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் இந்த கப்பலைத் தனது எல்லையில் அனுமதிக்க அந்த நாடு மறுத்துவிட்டதால், கப்பல் நிறுவனம் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஸ்பெயின் நாட்டின் லாஸ் பால்மாஸ் அல்லது டெனெரிஃப் பகுதிக்குச் செல்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில் ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கு மிக மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட எலிகள் மூலமே பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran