நேற்று (11-09-26) தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவர் சமூகத்தில் சாதிய கொடுமைகள் ஒழிய இளம் வயதிலேயே துணிந்து போராடியவர்.
இன்றளவும் சாதி ஒழிப்பு களத்தில், இவர் ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், இவரது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள துணை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது உருவப்படத்திற்குத் துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக வலைத்தளப்பக்கத்தில், 'தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில், அவரது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மரியாதையுடன் நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன்.
விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே பங்கேற்ற அவர், விடுதலைக்குப் பின்னரும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபட்டார். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பிய அவர், மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
சமத்துவம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது இலட்சியங்கள் என்றும் நினைவுகூரத்தக்கவை. தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும் தியாகமும் நமது சமூகத்தில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தத் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கட்டும்' என்று தெரிவித்துள்ளார். சமூக வேறுபாடுகளை நீக்க அயராது உழைத்த போராளிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டதற்குப் பலரும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

