Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு : சென்னை ஐ.ஐ.டி.யின் உதவியை நாடிய மத்திய அமைச்சர்!

இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு : சென்னை ஐ.ஐ.டி.யின் உதவியை நாடிய மத்திய அமைச்சர்!

த்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்களும் பெற்றோர்களும் இணையதளத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீட்டு இணையதள சேவையில் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொண்டு வரும் தொழில்நுட்பச் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், ஐஐடி சென்னை, கான்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவை உடனடியாக நியமிக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு நடைமுறைகள் எந்தவிதத் தடங்கலும் இன்றி துல்லியமாக நடைபெறுவதை உறுதி செய்ய இக்குழு சிபிஎஸ்இ அமைப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளது. இந்த உயர்மட்ட நிபுணர் குழுக்கள், சிபிஎஸ்இ இணையதளத்தின் செயல்திறன், தரவுப் பாதுகாப்பு அமைப்புகளில் விரிவான தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வர். குறிப்பாக, ஒரே நேரத்தில் பல பயனர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் இணையதள முடக்கம், சர்வர் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் உறுதித்தன்மை ஆகியவற்றை அவர்கள் விரிவாக ஆய்வு செய்வர்.

மேலும், மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது உள்நுழைவு அங்கீகாரம், பயனர் அணுகல், கட்டணம் செலுத்தும் முறைகள் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்ய இக்குழுவினர் உதவுவர். அதோடு மாணவர்களின் நலன்களுக்கே எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளிப்படையான, திறமையான, மாணவர்களுக்கு உகந்த ஒரு தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிபிஎஸ்இ முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து தொழில்நுட்ப மற்றும் பணப்பரிவர்த்தனை சார்ந்த சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காண்பது தொடர்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று (24.05.2026) விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய நான்கு முக்கியப் பொதுத்துறை வங்கிகள், சி.பி.எஸ்.இ. அமைப்பின் பணப்பரிவர்த்தனை நுழைவாயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தேர்வுக்கு பிந்தைய சேவை இணையதளத்துடன் அதனை ஒருங்கிணைக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிகள், முறையான கட்டணச் செலுத்தும் நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலம், சரியான நேரத்தில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் கூடுதல் கட்டணங்களை தானியங்கி முறையில் திருப்பிச் செலுத்தவும் வழிவகை செய்யும். சிபிஎஸ்இ தனது ஒட்டுமொத்த பணப்பரிவர்த்தனை முறையையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்விதத் தடையுமின்றி பாதுகாப்பாக நடைபெறுவதோடு, மறுமதிப்பீட்டுச் சேவைகளைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு இது உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran