Dailyhunt
"இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

"இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

வ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி அன்று உழைப்பாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உலக உழைப்பாளர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (01-05-26) உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டிஉழைப்பாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில் சிவப்பு சட்டையுடன் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் சேர்ந்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் இந்தியாவிலேயே இந்த மே முதல் நாளை சென்னையில் தான் நாம் கொண்டாட தொடங்கி இருக்கிறோம். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் தான் முதன் முதலில் சென்னை மாநகரத்தில் இந்த மே முதல்நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிலாளருடைய உரிமை, அதே போல் இன்றைக்கு நம்முடைய கழக தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற நான்காம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு துளி அளவு கூட மாற்றமில்லை என்பதை தெரிவிக்கிறேன்.

ஏதோ கருத்து கணிப்பின் அடிப்படையில் சொல்லுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை. கழகத்துடைய உணர்வை உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் அந்த கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன், தவிர வேறல்ல. அதே நேரத்தில் மே முதல் நாளை தொழிலாளருக்குரிய அந்த மரியாதையை, மதிப்பை அவர்களுடைய உரிமையை, கொண்டாடக்கூடிய வகையில் இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மே முதல் நாளை, அரசு விடுமுறையாக அறிவித்து அதை கொண்டாடத் தொடங்கினார். ஊதியத்தோடு கூடிய விடுமுறையாக மட்டுமல்ல, அந்த விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தவர் அண்ணாவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மே முதல் நாள் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது, அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை நாளை இந்தியா முழுமைக்கும் கொண்டுவர வேண்டும் என்று கலைஞர் எடுத்துச் சொன்னதன் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் குரல் எழுப்பினார்கள். அப்போது பிரதமராக இருந்த வி.பி சிங் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அரசு விடுமுறையாக ஊதியத்தோடு கூடிய விடுமுறையாக அறிவித்து அதுவும் இன்றைக்கு கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது.

இன்னும் ரெண்டு மூணு நாட்களில் நம்முடைய தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடுதான் அந்த கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தொடரும் தொடரும் தொடரும் என்ற உறுதியை எடுத்துச் சொல்கிறேன். இந்த மே தின நினைவு பூங்காவை கலைஞர் தான் உருவாக்கி தந்திருக்கிறார். இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய நினைவு சின்னத்தை கலைஞர் தான் உருவாக்கி தந்தது மட்டுமல்லது எப்படி அமைய வேண்டும் என்று பலமுறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து அதையெல்லாம் சரி செய்து அதை உருவாக்கி தந்திருக்கிறார். தொழிலாளர் மீது, தொழிலாளர் உரிமை மீது, எந்த அளவுக்கு கலைஞர் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் மட்டுமல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran