தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள், வரும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் சுற்றுப்பயணங்கள் என கடந்த 1 மாதமாக பம்பரமாக சுழன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது களைப்பை போக்க வெளிநாடு சுற்றுலாத் தளங்கள், உள்நாட்டு சுற்றுலாத் தளங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர்.
ஆனால் தவெக தலைவர் விஜய், தேர்தல் முடிந்தவுடன் தொடர்ந்து ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விஜய், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலையிலேயே தவெக தலைவர் விஜய், பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தரிசனமான விஸ்வரூப தரிசனத்தை விஜய் கண்டு களித்தார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியதைத் தொடர்ந்து அடுத்த நாளே (29-04-26) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு விஜய் தரிசனம் செய்தார்.
இப்படியாக தொடர்ச்சியாக அவர் பல்வேறு கோயில்களுக்கு வழிபாடு நடத்தி வரும் சுழலில், நாளை (02-05-26) நாகப்பட்டினம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் விஜய் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று இரவே வேளாங்கண்ணியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

